games

img

மகளிர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை யாருக்கு?

மகளிர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை யாருக்கு? நெதர்லாந்து - அர்ஜெண்டினா இன்று பலப்பரீட்சை

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5 முறை சாம்பியனான (1997, 2009, 2013, 2022, 2023) நெதர்லாந்து அணி 7ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி, உலகக்கோப்பை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. அதே போல 2 முறை சாம்பியன் (1993, 2016) பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணி 7ஆவது முறையாக (4 முறை இரண்டாவது இடம் - 2001, 2009, 2013, 2023) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனான நெதர்லாந்து அணி ஹாட்ரிக் சாதனையுடன் உலகக்கோப்பையை கைப்பற்ற தீவிர பயிற்சியில் களமிறங்க உள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உலகக்கோப்பையை வென்று நெதர்லாந்து அணியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அர்ஜெண்டினா அணி வியூகங்கள் அடங்கிய பயிற்சிகளுடன் களமிறங்குகிறது.  எனவே இரு அணிகளும் கோப்பை மீதே குறியாக களமிறங்குவதால்,  சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெறும் இறுதி ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு சாதகம்? இரு அணிகளும் சரிசம அளவில் பலமாக உள்ளது. ஆனால் கோலடிக்கும் மற்றும் இறுதிக்கட்ட வெற்றி முயற்சிகளில் நெதர்லாந்து அணி கூடுதல் பலத்தில் உள்ளது. இது அந்த அணிக்கு உலக்கோப்பையை வெல்ல 20% கூடுதல் வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் பெல்ஜியம் அணி நெதர்லாந்து அணியின் சூப்பர் பார்மை கலங்கடித்துச் சென்றது. இதனை அர்ஜெண்டினா சரியாக பயன்படுத்திக்கொண்டால், அர்ஜெண்டினா எளிதாக கோப்பையை வெல்லலாம். எது, எப்படியோ? ஆட்டத்தின் நகர்வைப் பொறுத்தே யாருக்கு கோப்பை வெல்ல சாதகம் என்பதை கணிக்க முடியும். 

நெதர்லாந்து - அர்ஜெண்டினா நேரம் : மாலை 3:45 மணி (இந்திய நேரம்) இடம் : சாண்டியாகோ, சிலி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் - 1, ஜியோ ஸ்டார் (ஓடிடி)

வெண்கலப்பதக்கம் வெல்லுமா சீனா?

இறுதிப்போட்டிக்கு முன்னதாக, வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் கடந்த சீசனில் (2023) வெண்கலப்பதக்கம் வென்ற பெல்ஜியம் - சீனா அணிகள் மோதுகின்றன. 2ஆவது முறையாக வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் பெல்ஜியம் அணியும், இளையோர் ஹாக்கி அரங்கில் முதன்முறையாக பதக்கம் (வெண்கலம்) வெல்லும் முனைப்பில் சீனாவும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ஜியம் - சீனா  நேரம் : மதியம் 1:30 மணி (இந்திய நேரம்) இடம் : சாண்டியாகோ, சிலி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் - 1, ஜியோ ஸ்டார் (ஓடிடி)