tamilnadu

img

அரிட்டாபட்டியிலிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய முடியாது என ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்ட பதிவில், கனிமத் துறையின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும்” என சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிலிடெட் நிறுவனத்திற்கு வழங்கிய ஏலத்தை ரத்து செய்ய முடியாது என்பதை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது.

தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு அடையாளங்கள், உயிர்ப்பன்மைய வளமிக்க சூழல் அமைவுகள், உயிரினங்கள் மற்றும் பல நூற்றாண்டுகால வரலாறு கொண்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய இடம்தான் இந்த கனிமத் தொகுதி. இதைக் கடிதம் வாயிலாகவும் நேரில் சந்தித்தும் விளக்கிய பின்னரும் ஒன்றிய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது.  தமிழ் மற்றும் தமிழர் உணர்வுகளையும், உரிமையும் துச்சமென மதிக்கும் பா.ஜ.க. அரசின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்த முடிவாகும். 

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய இப்பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். பா.ஜ.க. அரசு கூறுவதுபோல தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது. 

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒருபிடி மண்ணை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம் எனக் தெரிவித்துள்ளார்.