tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

விழுப்புரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு

விழுப்புரம், ஜன.1- விழுப்புரம் சரக காவல்துறை புதிய துணைத் தலைவர்  பொறுப்பேற்றார். விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவராக இருந்த இ.எஸ்.உமா சென்னை மாநகர காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார், அவருக்கு பதிலாக விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவராக அருளரசு நியமிக்கப்பட்டார், அவர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் வியாழனன்று (ஜன.1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

போலீசை கண்டு பயந்து ஓடிய முதியவர் வாய்க்காலில் விழுந்து பலி

சிதம்பரம், ஜன.1-  சிதம்பரம் அருகே உள்ள மடப்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (65) மற்றும் அவரது நண்பர்கள் சிலர், கடந்த புதனன்று மாலை கான்சாகிப் வாய்க்கால் கரையில் அமர்ந்து ‘புள்ளிதாள்’ விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த சிதம்பரம் தாலுகா போலீஸாரைக் கண்டதும், பிடிபடுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியன் அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து நீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அன்று இரவு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், வாய்க்காலில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளுக்கு இடையே சுப்பிரமணியன் சடலமாக மீட்கப்பட்டார்.  அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி: இருவர் கைது

அம்பத்தூர், ஜன.1- அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (30) என்பவர், புத்தாண்டு தினத்தன்று ஆவடியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.  அம்பத்தூர் - திருவேற்காடு நெடுஞ்சாலையில் டி.ஜி. அண்ணா நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் யுவராஜ் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை யினர், யுவராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர் ஜவஹர் ஸ்ரீராம் (25) மற்றும் டிராக்டர் ஓட்டுநர் சுரேஷ் (32) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.