நாடு முழுவதும் கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority) தெரிவித்துள்ளது. இது வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டில் நாட்டில் 126 புலிகள் உயிரிழந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அதைவிட 40 புலிகள் கூடுதலாக உயிரிழந்துள்ளன. இதன் மூலம் புலிகள் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மாநிலங்களிலேயே அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 55 புலிகள் உயிரிழந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரம்(38), கர்நாடகம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கணிசமான அளவில் புலிகள் உயிரிழந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
புலிகள் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக வேட்டையாடல், இயற்கை நோய்கள், மனித–விலங்கு மோதல்கள், விஷமிடுதல் மற்றும் ரயில்–சாலை விபத்துகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக வனப்பகுதிகளுக்கு அருகே கார்பரேட் நிறுவனங்களின் சுரங்க வேலைகளைகள் நடைபெறுவது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
புலிகள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கண்காணிப்பு, காடுகளின் பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
