tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

களத்தூர் கிழக்கு ஊராட்சிப் பகுதியை வேறு பகுதியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர், மே 2 -  பட்டியலின மக்களுக்கு சுழற்சி முறையில் கிடைக்கும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை தடுக்கும் நோக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், களத்தூர் கிழக்கு ஊராட்சிப் பகுதியை, வேறு பகுதியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பேராவூரணி ஒன்றியம் களத்தூர்  கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சியில் இரண்டு குக்கிராமங்கள் உள்ளன. பட்டியலின மக்கள் அதிகமாக வசித்து வரும் களத்தூர் கிழக்கு பகுதியை சித்துக்காடு கிராமத்துடன் இணைத்து, களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியினை சுழற்சி முறையில் பட்டியலின மக்க ளுக்கு கிடைக்கும்  வாய்ப்பை தடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், களத்தூர் கிழக்குப் பகுதியை வேறு பகுதியுடன் இணைக்கக் கூடாது எனவும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மேலும், கடந்த பல ஆண்டு களாக வருவாய் பதிவேடு  கணக்குகள், வாக்காளர் அடையாள  அட்டை, குடும்ப அட்டை, ஆதார்  அட்டை உள்ளிட்ட அரசு பதிவுகளில்  களத்தூர் கிழக்கு என்ற பெயர் இருந்து வரும் நிலையில், களத்தூர்  கிழக்குத் தெருவில் காலங்காலமாக அமைக்கப்பட்டு வரும், தனி வாக்குச்சாவடியையும் திட்டமிட்டு, வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.  களத்தூர் கிழக்கு எங்கள் பூர்வீக மண். எங்களை அடை யாளமற்றவர்களாக ஆக்கும் தேர்தல் ஆணைய அலுவலர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், தனி வாக்குச்சாவடியும், களத்தூர் ஊராட்சியிலேயே கிழக்குப் பகுதி நீடிக்க வேண்டும் என வலியு றுத்தியும், களத்தூர் கிழக்கு கிராம  மக்கள் திருச்சிற்றம்பலம் கடைவீதி யில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

தஞ்சை பெரியகோவில் தேர்த் திருவிழா: மே 7-இல் உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர், மே 2 -   தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோவில் (பெரிய கோயில்) சித்திரை தேர் திருவிழாவினை முன்னிட்டு, மே 7 (புதன்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.   இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக மே 24-ஆம் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, செலவாணி முறிச் சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

மே தின இசை வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி, மே 2-  உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தின விழா மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நித்தம், நித்தம் தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்த இசை வெளியீட்டு விழா அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் திருச்சியில் வியாழனன்று நடைபெற்றது. விழாவிற்கு, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மாநிலப் பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் இசையை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். சங்க மாநிலத் தலைவர் அருள்தாஸ், திருச்சி, கரூர் மண்டல பொதுச் செயலாளர் மாணிக்கம், புதுக்கோட்டை மண்டல பொதுச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், போர் முரசு கலைக்குழு பாடலாசிரியர் செங்குட்டுவன் கெளரவிக்கப்பட்டார். திருச்சி சிடபுள்யூஎஸ், காரைக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் கமிட்டிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி செயலாளர் ராமையா நன்றி கூறினார்.