சட்டமன்றத்தில் தலைவர்கள் ஆவேசம்!
சென்னை, ஜன. 8- அண்ணா பல்கலைக்கழக விவ காரத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக் குள் நுழைந்த வெளிநபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் (37) என்பவர் சம்பவத்தின்போது தொலைபேசியில் யாரிடமோ பேசினார் என்று பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை யில் அதிமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதிக்கப்பட்டது.
தேசிய தகவல் மையத்தை விசாரிக்க வேண்டும்!
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் கொடுமை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடிய நிகழ்வு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். அந்த மாணவி கொடுத்த புகார் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி என்று கேள்வி எழுந்தது. இதற்கு தொழில் நுட்ப கோளாறு என்று சொல்லப்பட்டது. ஆனால், அது சரியான காரணம் இல்லை. எனவே, ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். பாதிக்கப்பட்ட அந்த மாணவி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய உதவிகள் பாதுகாப்பு ஏற்பாடு களை அரசு உறுதிப்படுத்த வேண்டும். எதிலும் கால தாமதம் செய்யக்கூடாது. இந்த வழக்கின் குற்றவாளிகள் யாராக இருந்தா லும் அனைவருக்கும் கடுமையான தண்ட னை வழங்க வேண்டும்” என்றார்.
சமூகவிரோதிகள் புகுந்தது எப்படி?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர் மாரிமுத்து, “சென்னையில் மாணவிக்கு நடந்த அந்த கொடுமை என்பது நாட்டு மக்களையே அதிர செய்திருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கேமிராக்கள் இருந்தும், பாதுகாவலர்கள் பணியில் ஈடு பட்டிருக்கும் நிலையில் சமூக விரோதிகள் எப்படி கல்வி நிறுவன வளாகத்திற்குள் புகுந்தார்கள்? இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து எந்த வகை யிலும் தப்பிவிடக்கூடாது. பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் அது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஒன்றிய அரசு வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை, “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார். “குற்றவாளி யாருடன் செல்போனில் பேசினார் என்பதை அவர் பேசிய எண்ணை வைத்து ஒன்றிய அரசு கண்டுபிடித்து வெளியிடாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
ஆர்.பி. உதயகுமார்
அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என செய்திகள் வந்துள்ளன. முதல்வர் ஏன் தற்போது வரை அண்ணா பல்கலை விவகாரத்தில் விளக்கம் தரவில்லை” என்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் பேசுகையில், “பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள், ஒன்றிய அரசின் பொறுப்பில் உள்ள தளத்தில் இருந்து வெளியாகியுள்ளன. கைதான ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்” என்றார். “பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் பொறுப்பில் உள்ளதால், வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்” என்று மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பேசினார். மேலும், “யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்” என்றும், “அந்த சார் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எம்எல்ஏ ஈஸ்வரன் பேசினார். போராட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும் பாமக தலைவர் ஜி.கே. மணி பேசும் போது, போராட்டங்களுக்கு அனுமதி தரப்பட வில்லை என்று கூறினார். இதற்கு பதி லளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும்; போராட்டம் செய்வதற் கான சில பகுதிகள் உள்ளன. திடீரென்று அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும் போது வழக்கு போடப்படுகிறது. அனு மதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெண்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்
அதிமுகவுக்கு முதல்வர் பதிலுரை
சென்னை, ஜன.8- யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.அதில், சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை யானது மாபெரும் கொடூரம். இதனை யாராலும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
நீங்கள் யார் பக்கம் ?
தொடர்ந்து பேசுகையில், இந்த ஆட்சி மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் பேசியிருக்கின்றனர். யாருக்கு எந்த நோக்கம் இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்று தரக்கூடியதை தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக, உறுதியாக ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை கைது செய்யாமல் இருந்தாலோ குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்து இருந்தாலோ இந்த அரசை நீங்கள் குறை சொல்லலாம். சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
குண்டர் சட்டம்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப் பட்ட சிறப்பு விசாரணைக் குழு தான் விசாரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப் பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்துள்ளது மாபெரும் கொடூரம். இதனை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து எம்எல்ஏக்கள் பேசி யிருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று, நியாயம் பெற்றுத் தருவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி? பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு அரசு காரணமில்லை. ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் துறைதான் காரணம். தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்தது காவல்துறை தான், உடனடியாக ஒன்றிய அரசின் துறைக்குத் தெரிவித்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவ்வப்போது ‘யார் அந்த சார்’ என்று கேட்கிறார்கள். உங்களிடம் ‘யார் அந்த சார்’ என்பது குறித்து ஆதாரம் இருந்தால் உடனடியாக உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவிடம் அதனை அளிக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் சரியாக இல்லை என்று எப்படி கூற முடியும். குற்றவாளி அது யாராக இருந்தாலும் 100 விழுக்காடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது, 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக அனுதாபி
சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக உறுப்பினர் அல்ல. திமுகவின் ஆதரவாளர் என்பதை நான் மறுக்கவில்லை. அமைச்சர்களோடு படங்கள் எடுத்திருக்கலாம். தவறு இல்லை. திமுக உறுப்பினராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்பேன். அந்த குற்றவாளி திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றவில்லை. குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். எங்களுக்கு பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் தனி நபராக இருந்தாலும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். எனவே, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க எதிர்க் கட்சியினர் முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பொள்ளாச்சி சம்பவம்
“கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி யில் நடந்த பாலியல் குற்றத்தில் ஒரு பெண் மட்டும் பாதிக்கப்படவில்லை, பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று வந்தது. அதிமுக ஆட்சி யில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, வழக்கு சிபிஐ-யிடம் சென்ற பிறகு தான் உண்மை வெளியே வந்தது. பாதிக்கப் பட்டவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதியப்படவில்லை. பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டது என்று சிபிஐ தெளிவாக தெரிவித்தது. அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜியையும் சிறப்பு புலனாய்வுக் குழு காவல் துறையினர் நேற்று கைது செய்த னர். சென்னை மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை, திமுகவின் ஆதரவாளர்.” என்று பேசினார். அப்போது, பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.