சென்னை, ஜன. 8 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை (ஜன.8) விவாதம் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி உரையாற்றினார். அதன் விவரம் வரு மாறு:
சாம்சங் தொழிற்சங்கத்தை உடனடியாக பதிவு செய்க!
நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை. இது குறித்து முதல்வரின் முயற்சிகள் வரவேற்கக் கூடியன. அதே நேரத்தில் நம்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்க உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்க பதிவை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றம் கொடுத்திருந்த 6 வார கால அவகாசம் முடிவடைந்து விட்டது என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டுகிறோம்.
போராட்ட உரிமைகளை மறுக்கும் காவல்துறை
ஓர் அரசுக்கு நல்ல பெயரையோ அல்லது அவப்பெயரை வாங்கித் தருவது காவல்துறை யின் செயல்பாடு என்பதை கடந்த கால சம்ப வங்களின் மூலம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதாரண கோரிக்கை களுக்காக இயக்கம் நடத்துகிற போது காவல்துறை அனுமதி மறுப்பது என்பது அர சியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை மறுப்பதாகும். காவல்துறை அனுமதி மறுப்பதாலேயே சட்டம் - ஒழுங்கு பிரச்சனை எழுகிறது. இது ஊடகங்களில் பரபரப்பாகி செய்திகளாக மாறுகிறது. எங்கள் கட்சியின் மாநில மாநாட்டு செந்தொண்டர் பேரணிக்கு கூட காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ஜனநாயக இயக்கங்கள், உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அரசின் கவனத்தை ஈர்க்கக் கூடிய போராட்டங்களுக்கு கூட காவல்துறை அனுமதி மறுப்பது எந்த வகையிலும் நியாய மாகாது. காவல்துறையின் அதிகாரத்தை கட்டுப் படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடி பட்டியலில் தோழர்களை சேர்ப்பதா? மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்காக போராடுகிற மக்கள் ஊழியர்களை ரவுடி பட்டிய லில் சேர்ப்பது ஏற்புடையதல்ல. உதாரண மாக, தென்காசி காவல் நிலையத்தில் எங்கள் கட்சித் தோழர் அசோக் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் காவல் நிலையத்தில் தோழர் கணேசன் ஆகியோரை ரவுடி பட்டிய லில் காவல்துறை வைத்திருப்பது பொருத்த மற்றது. உடனடியாக இந்த பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டுகிறேன்.
மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும்
பொங்கல் பரிசுத் தொகை ரூ. 1000 கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள். அதை உடனடியாக வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும். குறு-சிறு நடுத்தர தொழில் முனை வோர்கள் மின்சார நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென தொடர்ந்து குர லெழுப்பி வருகின்றனர். இதை அரசு பரி சீலிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் பல வற்றை அரசு நிறைவேற்றி இருக்கிறது எனினும், பல முக்கிய மான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அவைகளையும் நிறை வேற்ற வேண்டும். முறைசாரா தொழிலாளர் நலவாரியப் பதிவுகள் முறைசாரா தொழிலாளர் நலவாரியங் களை முறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 45 லட்சம் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் விடுபட்டுள்ளனர். அவர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்டைத் தடுப்புப் பணியை வெளிமுகமையிடம் தருவதா?
வேட்டைத் தடுப்பு காவலர் பணியிடங் களில் பழங்குடியின மக்கள் மட்டும் வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். தற்போது அவுட்சோர்சிங் முறையில் யார் வேண்டு மானாலும் சேரலாம் என்று அரசாணை போடப்பட்டுள்ளது. இது பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து பழங்குடியின மக்களுக்கே இந்த வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நீர்த்துப் போகும் ஏழைகளின் வேலை திட்டம் 100 நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இத்திட்டத்திற்கான தொகையை ஆண்டுதோறும் ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருவது கண்டனத்திற்குரியது. 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும், தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும், இத்திட்டத்தை கிராமப்புறத் தன்மை கொண்ட அனைத்து பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும்!
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக அண்மையில் புள்ளி விபரங்களுடன் செய்திகள் வெளியாகின. அதை உடனடியாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை அறவே ஒழிக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் சாவு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூ. 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படாமல் இருக்கும் சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கி நவீன வசதிகளுடன் புனரமைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுகிறோம். நவீன கந்துவட்டி கொடுமை நுண் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் நவீன கந்துவட்டி நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்துள்ளன. வறுமையில் வாடும் பெண்களை கடன் வலையில் சிக்க வைத்து கடன் கட்ட முடியாமல் பெண்கள் தற்கொலைக்கு ஆளாகும் சம்பவங்களையும் நாம் பார்க்கிறோம். இதை தடுப்பதற்கு சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட வேண்டும். கூட்டு றவுத்துறை மூலம் தமிழக வங்கியை உரு வாக்கி ஏழை, எளிய பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
பட்டா வழங்க சிறப்பு திட்டம் தேவை
தமிழக அரசு தொடர்ச்சியாக வீட்டு மனைப் பட்டா வழங்கி வருகிறது என்ற போதி லும், இன்னும் வீட்டுமனைப் பட்டா கேட்டு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விண்ணப்பித்து போராடி வருகின்றனர் என்ப தையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரு கிறேன். இவர்களுக்கு பட்டா வழங்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டுகிறோம்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், கல்லூரி ஆசிரியர்கள், சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என அரசின் அனைத்து ஊழியர்களும் போராடி வரு கின்றனர். அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
ஜனநாயக மாண்பைப் பாதுகாக்க வேண்டும்
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தாமல், அதிகாரிகள் மூலம் நிர்வகித்து வருவது ஜனநாயக மாண்பு ஆகாது. எனவே, உடனடியாக தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். கீழ்வேளூர் தொகுதியில் உள்ள சீரனேரி என்ற ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி நீரை சேமித்து அப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் செய்து தரப்படும் என்றார். மூன்றாண்டுகள் கடந்து விட்டன. எனவே, ஏரியைச் சீரமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். திருப்பூண்டி கிழக்கு என்ற பெயரில் உள்ள கிராம ஊராட்சியை காமேஸ்வரம் என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. அதையும் செய்து தரவேண்டும். இவ்வாறு நாகை மாலி பேசினார்.