வரலாறு என்பது ஆய்வு மூலம் பெறப் பட்ட அறிவாகும். அந்த அறிவை ஆவணப்படுத்துவதும் வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆய்வு செய்யப்படாதது, செய்யப்பட்டவை ஆவணப்படுத்தப்படாததும் வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன. அவற்றைத் தோண்டித் தோண்டி எடுக்கும் முயற்சி களுக்குப் பஞ்சமில்லை. ஏதோ ஒரு இடத்தில் கிடைக்கும் ஒரு செய்தியைக் கொண்டு, வர லாற்றை நகர்த்தும் முயற்சிகளை ஆய்வா ளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி நகர்த்தியதில் தென்படுபவர்தான் ஃபாத்திமா ஷேக். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஜனவரி 9, 1819 ஆம் ஆண்டில் பிறந்தார். 1830களில் பெண்கள் என்றால் அம்மா, மனைவி மற்றும் மகள் என்பது மட்டுமாகவே இருந்தது. மதத்தின் பெயரால் உடன்கட்டை ஏறுதல், பலதார மணம், குழந்தைத் திருமணம், பெண்சிசுக்கொலை உள்ளிட்ட கொடுமைகள் காணப்பட்டன. அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்பது சமூகத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டது. அப்படிப் பெண்கள் கல்வி கற்க வேண்டுமானால், முத லில் குடும்பத்தினரின் ஆதரவு தேவைப்படும். அப்படியே அவர்களின் ஆதரவு கிடைத்து விட்டாலும், சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், குடும்பத்தின் ஆதரவுடன், சமூக எதிர்ப்பைச் சமாளித்து முறையான கல்வியை முதலில் கற்ற பெண்களில் ஃபாத்திமாவும் ஒருவராவார்.
பூலேவுக்கு புகலிடமும் பள்ளிக்கூடமும்
அவரது தந்தையார் இப்ராகிம் ஷேக், மகளின் கல்வியில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். மராத்தி, அராபிக், உருது மற்றும் பாரசீக மொழிகளில் கல்வி பயின்றார். இவரைப் பற்றிய செய்திகளில் ஒன்று, ஷேக் தாவூது என்பவரை மணக்கிறார். கணவரும் சமூக ஆர்வலராக இருக்கிறார். இருவரும் சேர்ந்து கல்விப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். உஸ்மா அன்சாரி என்ற ஆய்வாளர், ஃபாத்திமாவின் கணவர் பெயரை சர்தார் ஜகாங்கீர் கான் என்று குறிப்பிடுகிறார். மற்றொரு செய்தி என்னவென்றால், சகோதரர் உஸ்மான் ஷேக்குடன் இணைந்து பணியாற்றினார் என்பதாகும். இப்படித்தான் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 1848இல் புனேயில் அமைக்கப்படும் பெண்களுக்கான பள்ளியில் சகோதரரின் பங்கு மகத்தானதாகும்.
முதல் ஆசிரியர்கள்
ஜோதிராவ் பூலேவும், சாவித்திரிபாய் பூலேவும் அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவர்கள் சென்று அடைக்கலம் புகும் இடமாக ஃபாத்திமாவின் வீடு இருந்தது. அவரது சகோதரர் உஸ்மான்ஷேக் பெரும் துணையாக நிற்கிறார். பெண்களுக்கான பள்ளியைத் துவக்குவதில் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் தடை முன்னுக்கு வந்து கொண்டே இருந்தது. முதலில் யாரும் இடம் தரவில்லை. தங்கள் வீட்டையே பள்ளியாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஃபாத்திமா சொல்கிறார். அடுத்தபடியாக, மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் முன்வரவில்லை. ஃபாத்திமாவும், சாவித்திரிபாயும் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். முதல் பள்ளிக்கூடத்தில் இருவரும் முதல் ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
வரலாற்றில் அதிர்வலைகள் கங்காபாய், சிந்தியா பர்ரர்
இந்த இருவரும்தான் நாட்டின் முதல் பெண் ஆசிரியர்கள் என்றால், வரலாறு மேலும் சில தகவல்களைச் சொல்லி அதிர வைக்கிறது. 1820களிலேயே பெண்களுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பம்பாய் நகரில்(இன்றைய மும்பை) 1824 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே பெண் குழந்தைகளுக்கான பள்ளியொன்று தொடங்கப்பட்டுள்ளது. கங்காபாய் என்றொரு பெண் ஆசிரியர் அங்கு கல்வி கற்றுத் தந்துள்ளார். ஆனால், அதே ஆண்டில் மே மாதத்தில் அப்பகுதியில் பரவிய காலரா நோய்க்கு கங்காபாயும் பலியாகியிருக்கிறார். அவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவர் கற்றுக் கொடுக்க எங்கே பயின்றார்? இரண்டு மாதங்கள் கூட கற்றுக் கொடுக்காமலேயே மறைந்து விட்டாரா? இவற்றிற்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லை.
1827 ஆம் ஆண்டில், இந்தியாவில் கிறித்தவ ஊழியம் செய்வதற்கான பணியில் சிந்தியா பர்ரர் என்ற பெண்மணி இணைகிறார். 1829 ஆம் ஆண்டில் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விடுகிறது. ஆனால் இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், மற்றவர்கள் பிற உயர் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவுமே இருந்தனர். இந்த சிந்தியா பர்ரர் தொடங்கி நடத்திய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில்தான் சாவித்திரிபாய் பூலேவும், ஃபாத்திமா ஷேக்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.
கல்வித் தாய் பாத்திமா
இவர்களின் முயற்சியால் 1848ஆம் ஆண்டில் புனே நகரில் தொடங்கப்பட்ட பள்ளியில் பாடத்திட்டத்தை ஃபாத்திமாவே உருவாக்குகிறார். பெண் குழந்தைகள் என்பதோடு நிற்காமல், தலித்துகளையும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். முதலில் மராத்தி மொழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பூலேக்கள் உருவாக்கிய ஐந்து பள்ளிகள் உள்ளிட்ட ஏழு பள்ளிகளில் மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை அவர் மேற்கொண்டார். குழந்தைகளை அனுப்புவதில் பெற்றோர்களுக்கும் தயக்கம் இருந்ததால் வீடு, வீடாகச் சென்று பள்ளிக்கூடத்திற்கு அனுப்புமாறு அவரும், சாவித்திரிபாய் பூலேவும் வேண்டினர். புனே சேவா சதன் என்ற அமைப்பைத் தனது சகோதரரோடு இணைந்து உருவாக்கும் ஃபாத்திமா, பெண் குழந்தைகளுக்கு தொழிற்கல்வியைக் கற்றுத் தருகிறார். புனே நகரத்தோடு அவர் சுருங்கி விடவில்லை. குஜராத் மகாராஷ்டிரா பயணம் செல்லும் ஃபாத்திமா, பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தைப் பல இடங்களிலும் எடுத்துரைக்கிறார். “கல்வித்தாய்” என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்படுகிறது.
கல்விப் பணியைத் தாண்டி...
ஃபாத்திமா ஷேக் மற்றும் சாவித்திரிபாய் ஆகிய இருவரின் பணிகள் பெண் கல்வியோடு நின்றுவிடவில்லை. பள்ளிக்கூடங்கள் சமூக சீர்திருத்தங்களுக்கான மையங்களாக மாறின. குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தினார்கள். 1852 ஆம் ஆண்டில் சாவித்திரிபாய் பூலேவுடன் இணைந்து பெண்கள் அமைப்பான மகிளா மண்டலை ஃபாத்திமா உருவாக்குகிறார். பொது வாழ்க்கையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அதில் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார். தங்கள் பிரச்சனைகளைப் பற்றி பெண்கள் விவாதிப்பதற்கான மேடையாக மகிளா மண்டலை ஃபாத்திமா மாற்றினார். சாதிப்பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தையும் அவர் நடத்தினார். சாதிப்பாகுபாடுகள் என்ற தளையைத் தகர்த்து எறிய கல்வியே உதவும் என்று அவர் உறுதியாக நின்றார். பெண்கள் கல்விக்கு எதிராக மத ரீதியான, சாதி ரீதியான தடைகளை உடைப்பதற்கு ஃபாத்திமாவின் பங்களிப்புகள் உதவின.
கவிஞர் ஃபாத்திமா
ஃபாத்திமா ஷேக் பற்றிய விபரங்கள்பெருமளவில் கிடைக்கவில்லை என்றாலும், அவர் கவிஞர் என்பதும், ஏராளமான கவிதைகளை அவர் எழுதினார் என்பதும் தெரிகிறது. சாவித்திரிபாய் பூலே, ஃபாத்திமாவுக்கு எழுதிய கடிதமொன்றில், “உன்னுடைய கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பணியினை நீ செய்ய வேண்டும்” என்று கூறுகிறார். ஆனால், ஃபாத்திமா எழுதிய கவிதைகள் எதுவும் கிடைக்கவில்லை. அக்டோபர் 9, 1900ல் மறைந்த ஃபாத்திமா வரலாற்றில் மேலும் அறியப்பட வேண்டியவராக விளங்குகிறார். இந்தியாவில் கல்விக்கு மறுவடிவம் கொடுத்த இவரைப்பற்றிய ஆய்வுகள் குறைவு. இதன் எண்ணிக்கை அதிகரித்தால் வரலாற்றின் வெளிச்சம் அவர் மீது அதிகரிக்கும். பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற அவரது 19 ஆம் நூற்றாண்டுப்பணி இப்போதும் தேவைப்படுகிறது. அவரது அர்ப்பணிப்பு வரலாறு நடப்புக்காலத்தில் உத்வேகமளிப்பதாக அமையும்.