tamilnadu

மாநில உரிமைகளைப் பறித்து ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு வழிவகுக்கும் யுஜிசி விதிகள்

சென்னை, ஜன. 8 - பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வரைவு விதிமுறைகள், மாநில உரிமைகளைப் பறிப்பது, ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு வழி வகுக்கக் கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர் பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:

அதிகாரத்தை ஆளுநரிடம் ஒப்படைக்கும் திட்டம்

பல்கலைக்கழக மானியக் குழுவின்  வரைவு விதிமுறைகள் மாநில உரிமை களை பறித்து அதிகார குவிப்பிற்கு வழி வகுப்பதோடு, கார்ப்பரேட் மயத்திற்கும் வழி வகுப்பதாகும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும் தொடர்ந்து மாநில உரிமை களைப் பறிக்கிற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக் கழக மானியக் குழுவின் வரைவு விதி முறைகள், துணைவேந்தர்கள் நிய மனத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதி காரங்களை முழுமையாக பறித்து ஆளு நரிடம் ஒப்படைப்பதாக உள்ளது. 

அராஜகப் போக்கிற்கு சட்ட அங்கீகாரமா?

வேந்தர் என்ற முறையில் ஆளுநரே, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவையும் நியமிப்பார் என்ப தும் அவருடைய தெரிவு நபரே அக்குழு வின் தலைவராக இருப்பார் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பபட்ட மாநில அர சுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதில் எந்த பங்கும் இருக்காது என்பதே ஆகும். ஏற்கெனவே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நியமிக்கும் போக்கை ஆளுநர்கள் கடைப்பிடித்து வரும் வேளை யில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் அத்தகைய அராஜகப் போக்கிற்கு ஆளுநர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் அளிக்கிறது.

கூட்டாட்சித் தத்துவம் மீது நடத்தப்பட்ட கடும் தாக்குதல்

இந்த வரைவு விதிமுறைகள் மத்திய சட்டத்தில் உருவாக்கப்பட்ட நிறு வனங்களுக்கு மட்டுமின்றி மாநிலச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட நிறு வனங்களுக்கும் அவற்றின் உறுப்பு நிறு வனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப் பட்டிருப்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும். மேலும் நேரடியாக கல்விப்புலம் சாராத தொழில், பொது நிர்வாகம், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம் என்ற வரைவு விதி முறையில் உள்ள அம்சமும் அபாயகர மானதாகும். உயர் கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் கூடிய நபர்களை நியமிப்பதற்கும், சித்தாந்த ரீதியான ஊடுருவல்களை செய்வதற்கு மான நடவடிக்கையாகும் இது.

வரைவு பரிந்துரைகளை திரும்பப் பெற வேண்டும்

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெய ரால், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசு நடத்தி வரும் தாக்குதல் களின் தொடர்ச்சியாகவே இந்த வரைவு விதிமுறைகள் அமைந்துள்ளன. வணிகமயம் - மதவெறி மயம் - அதிகாரக் குவிப்பு ஆகிய இலக்குகளை நோக்கிய பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள் ளார்.

ஒன்றுபட்டு முறியடிக்க அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

புதுதில்லி, ஜன. 8- அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான பல்கலைக் கழக மானியக்குழுவின் வரைவு விதி முறைகளை அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. 2025-ஆம் ஆண்டு பல்கலைக் கழக மானியக்குழுவின் விதி முறைகளின் வரைவு, மாநிலங்களில் இயங்கி  வரும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு இருந்துவரும் உரிமைகள் மீது நேரடியான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள ஆளுநர்களே துணை வேந்தர்களை நியமித்திடுவதற்கு வகை செய்யும் விதத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் கள் தன்னிச்சையான விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இவ்வாறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்தத் திருத்தங்கள் ஏற்பட்டால், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசாங்கங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாது ஒழிக்கப்பட்டு விடும். இந்தத் திருத்தத்தின் மூலமாக, ஒன்றிய அரசாங்கம், தாங்கள் விரும்பும் எவரையும், தங்களுக்குத் தலையாட்டும் ஆளுநர்கள் / வேந்தர்கள் மூல மாக, மாநிலங்களில் செயல்படும் பல்கலைக்கழ கங்களின் துணை வேந்தர்களாக நியமித்திட முடியும். இந்த வரைவு விதிகள், கல்வி பொதுப்பட்டியலில் உள்ள ஒன்று என்கிற அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாட்டை மீறுகிறது. பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் இத்தகைய ஆபத்தான திருத்தத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வர வேண்டும். இந்தத் திருத்தம் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)