tamilnadu

சாய ஆலை கழிவுநீர் தொட்டி பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி பலி!

சாய ஆலை கழிவுநீர் தொட்டி பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி பலி!

திருப்பூர் இடுவம்பாளையத்தில் நிகழ்ந்த துயரம்

திருப்பூர், மே 20 - திருப்பூர் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த இளைஞர்கள் மூவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.  இதுதொடர்பாக சாய ஆலை உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. உயிரிழந்த பட்டியல் சமூகத்தினர் மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்குமாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி இடுவம் பாளையம், சுண்டமேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சரவணன், பனியன் தொழிலாளி. இவரும் அதே பகுதி யைச் சேர்ந்த வேணுகோபால், ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் சேர்ந்து சின்னச்சாமி என்பவருக்குச் சொந்த மான கழிவுநீர்த் தொட்டி சுத்தி கரிக்கும் லாரியில் திங்களன்று காலை கரைப்புதூர் பகுதிக்குச் சென்றுள்ள னர். அங்கு நவீன் என்பவருக்கு சொந்த மான ‘ஆலயா சாய ஆலை’யில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எவ்விதக் கருவிகள், பாதுகாப்பு உப கரணங்கள் இல்லாமலேயே  அங்குள்ள கழிவுநீர்த் தொட்டி பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கிய சரவணன், வேணுகோபால், ஹரிகிருஷ்ணன் ஆகிய மூவருமே தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை மீட்பதற்குச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட அந்த ஆலையில் வேலை செய்யும் வேறு சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இவர்களை திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே சரவணன், வேணுகோபால் ஆகியோர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஹரிகிருஷ்ணன், சின்னச்சாமி ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஹரிகிருஷ்ணனும் செவ்வாயன்று காலை உயிரிழந்தார்.  விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் அசோக் ஆகியோர் திங்களன்று இரவு அந்த ஆலைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அத்து டன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி களும் அந்த ஆலையை ஆய்வு செய்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி களின் ஆய்வறிக்கை வந்தவுடன் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரி வித்தார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த சரவணனின் மனைவி கௌசல்யா அளித்த புகாரின் அடிப்படையில் சாய ஆலை உரிமையாளர் நவீன், பொது மேலாளர் தனபால், கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு லாரி உரிமையாளர் சின்னச்சாமி மற்றும் மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது பல்லடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் விசாரணை அதிகாரியாக இருக்கிறார். கவனக் குறைவாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்துதல், மனிதக் கழிவுகளை மனிதரை வைத்து அள்ளியது, மனித கழிவுகளை பட்டியல் வகுப்பினரை வைத்து அள்ளியது உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் செ. மணிகண்டன், தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சண்முகம், ரவிச்சந்திரன், வழக்கறிஞர் எஸ். பொன்ராம், கருப்பசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி. சம்பத், செயலாளர் கே. ரங்கராஜ், துணைத் தலைவர் பி. பாலன், மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பா.  லட்சுமி, வாலிபர் சங்க துணைச்செய லாளர் நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட் டோர் திருப்பூர் அரசு மருத்துவ மனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர் குடும்பத்தாரைச் சந்தித்து நடைபெற்ற சம்பவத்தைக் கேட்டறிந்து, ஆறுதல் தெரிவித்தனர்.

ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க தீஒமு கோரிக்கை

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச. நந்தகோபால், மாவட்டச் செயலாளர் சி.கே. கனகராஜ், பொருளாளர் பஞ்சலிங்கம் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயனிடம், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்கள் அளித்த மனுவில், 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கழிவுத்தொட்டி கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ. 30 லட்சம் என்ற அடிப்படையில் சரவணன், வேணுகோபால், ஹரிகிருஷ்ணன் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் வழங்க வேண்டும். மேலும், குடும்பத்தினருக்கு வீடு, நிலம், வேலை வழங்கும் வரை இழப்பூதியம் ஆகிய மறுவாழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கழிவுநீர் தொட்டியில் பலியானவர்களை சட்டவிரோதமாக இறக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். அதில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.