இது ஒரு தத்துவத்தின் வெற்றி விழா!
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேர்காணல்
கேள்வி: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களுக்குச் சிலை அமைக்கப்படுவது குறித்து உங்கள் முதல் உணர்வு என்ன?
பதில்: ஒட்டுமொத்த மனித குலத்தினுடைய முன்னேற்றத்திற்காகத் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் சிந்தனை யாளர் தோழர் காரல் மார்க்ஸ். தமிழகத்தின் தலைவர்களாக விளங்கக்கூடிய பல ருக்கும் சென்னையில் சிலைகள் அரசால் வைக்கப்பட்டு நல்ல முறையிலே பராமரிக்கப் பட்டு வருகிறது. ஆனால், உலகின் தலை சிறந்த சிந்தனையாளரான காரல் மார்க்ஸ் அவர்களுக்குச் சென்னையில் ஒரு சிலை இல்லை என்கிற பெரும் குறை நீண்டகாலமாக இருந்தது. இப்போது அந்த மாபெரும் தத்துவ ஞானிக்குச் சென்னையில் சிலை அமைக்கப்படுவது என்பது உழைப்பாளி வர்க்கத்திற்குப் பெருமிதம் அளிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
கேள்வி: இந்தச் சிலை அமைப்பதற்கான முன்முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு மேற்கொண்டது?
பதில்: இங்கே ஒரு சிலை வைக்க வேண்டும் என்பதற்கான முன்முயற்சியைப் பலரும் பல்வேறு காலங்களில் மேற்கொண்டி ருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் முதலமைச்சர் அவர்களுடைய பிறந்தநாள் விழா நடைபெற்ற போது, அவரிடத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தோம். தோழர் காரல் மார்க்ஸ் அவர் களுக்குச் சென்னையில் ஒரு முழு உருவச்சிலை யை அமைக்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை அவர் கனிவோடுஏற்றுக்கொண்டார்.
கேள்வி: தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் காட்டிய வேகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: எங்களது கோரிக்கையை ஏற்ற அடுத்த சில நாட்களிலேயே, இதற்கான அதி காரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் வெளி யிட்டார். சொன்னதோடு மட்டுமல்லாமல், மிக விரைவாகச் செயல்பட்டு ஓராண்டு காலத்திற்கு உள்ளாகவே சிலையை அமைத்துத் திறப்பு விழா நடத்தக்கூடிய தமிழ்நாடு அரசுக்கும், குறிப்பாகத் தனிப்பட்ட அக்கறை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரி
வித்துக் கொள்கிறோம். கேள்வி: திறப்பு விழா காணும் சிலையின் உயரம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து விளக்க முடியுமா?
பதில்: இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டோம். கன்னிமாரா நூலகத்தினுடைய வாயிலில், 9 அடி உயர பீடம், அதற்கு மேல் 9 அடி உயர முழு உருவச்சிலை என மொத்தம் 18 அடி உயரத்தில் மிகக் கம்பீரமாக மார்க்ஸ் எழுகிறார். லண்டனில் அவருடைய நினைவிடத்தில் வைக்கப் பட்டுள்ள அந்த முக அமைப்பு இங்கே இந்த முழு உருவச் சிலையிலும் மிகத் தத்ரூபமாக
இடம் பெற்றிருக்கிறது. கேள்வி: இந்தச் சிலையின் வடிவமைப்பில் முதலமைச்சரின் பங்களிப்பு என்ன?
பதில்: இந்தச் சிலையில் உள்ள முக அமைப்பிற்கான புகைப்படத்தை முதலமைச்சர் அவர்களே தான் லண்டனுக்குச் சென்றிருந்த போது காரல் மார்க்ஸ் கல்லறையில் இருந்து எடுத்து வந்திருக்கிறார். அதை கொடுத்து, “இதே போன்று வையுங்கள்” என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு இந்தச் சிலை அமைப்பதில் அவர் மிகுந்த அக்கறை காட்டி, ஒவ்வொரு பணியையும் சிறப்பாகக் கண்காணித்து அந்தச் சிலை மிக நேர்த்தியாகவும் அசல் தோற்றத் தோடும் அமைவதை உறுதி செய்துள்ளார்.
கேள்வி: இந்தியாவில் மார்க்சியப் புரட்சியின் அடிப்படைத் திட்டம் மற்றும் அதன் நோக்கம் என்ன?
பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தி யாவில் இருக்கக்கூடிய நிலப்பிரபுத்துவ - முத லாளித்துவ ஆட்சியை ஒரு மக்கள் ஜனநா யகப் புரட்சி மூலமாகத் தூக்கி எறிய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் மத்தியதரப் பகுதி யினர் ஆகிய அனைத்து உழைக்கும் மக்களை யும் ஓரணியில் திரட்டுவது என்கிற உன்னத நோக்கத்தோடு இந்தப் புரட்சிகரப் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்.
கேள்வி: தற்போதைய சூழலில் மார்க்சிஸ்ட் கட்சித் திட்டம் எவ்வளவு பொருத்தப்பாடு உடையது என்று கருதுகிறீர்கள்?
பதில்: இன்று இந்தியாவில் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசு என்பதையும் தாண்டி, இது கார்ப்பரேட்டுகளோடு கள்ளக்கூட்டணி வைத்திருக்கிற ஒரு ஆட்சியாக மாறியிருக் கிறது. இத்தகைய சூழலில், இடதுசாரி கட்சி களிடையே ஒத்தக்கருத்துடைய பிரச்சனைகளில் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த ஒற்றுமை யை மேலும் வலிமையாக்கி, ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக கூட்டுப் போராட்டத்தை வலுப்படுத்துவது, முன்னெடுத்துச் செல்வது மிக அவசியமான மற்றும் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது. கேள்வி: பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை - இந்த இரண்டையும் மார்க்சியம் எப்படி எதிர்கொள்கிறது? பதில்: மார்க்சியம் என்பது ஒரு அறிவியல். அது எல்லா விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பது தான். பொருளாதாரச் சுரண்டலாக இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறை யாக இருந்தாலும், அல்லது பாலின ரீதியான ஒடுக்குமுறையாக இருந்தா லும், அனைத்து விதமான அநீதிகளை யும் எதிர்த்துப் போராடு வதற்கு மார்க்சி யம் ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வெளிச்சத்தில்தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்துகிறது.
கேள்வி: திராவிட இயக்கம், அம்பேத்கரிய இயக்கம் மற்றும் மார்க்சிய இயக்கம் - இவை மூன்றும் ஒரு புள்ளியில் இணைவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மார்க்சிய இயக்கம், திராவிட இயக்கம், அம்பேத்கரிய இயக்கம் ஆகிய மூன்றுமே சமூக ஒடுக்குமுறை மற்றும் பொருளா தார ஒடுக்குமுறைக்கு எதிராக, அடித்தட்டு மக்களின் விடுதலைக் காகப் போராடக்கூடியவைதான். எல்லா நதிகளும் ஒரு பெருங்கடலில் சங்கமிப்பதைப் போல, அனைத்துச் சமூகநீதிக்கான மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் மார்க்சியம் என்கிற அந்த மாபெரும் அறிவியல் பெருங்கடலில் தான் முழுமை பெறுகின்றன.
கேள்வி: மத்தியில் ஆளும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை மார்க்சியப் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான துணை அமைப்புகளைக் கொண்டு மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. மதவெறிக் கருத்துகளைச் சமூகத்தில் ஊடுருவச் செய்கிறது. இது மனித குலத்திற்கே விரோதமான நடவடிக்கை. இத்தகைய நவீன பாசிசப் போக்குகளை முறியடிக்க மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படை யில் மக்கள் சக்தியை ஒருங்கி ணைப்பதே எமது திட்டமாகும்.
கேள்வி: இந்த வகுப்புவாத சக்திகளைத் தனிமைப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் என்ன?
பதில்: முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ மற்றும் கார்ப்பரேட் கள்ளக்கூட்டணி கொண்ட இந்த வகுப்புவாத அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கு ஒத்த கருத்துடைய அனைத்து மதச்சார்பற்ற சக்தி களையும் ஒருங்கிணைக்கும் முயற்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இத்தகைய கூட்டுப் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகின்றன, அதை மேலும் விரிவுபடுத்துவோம்.
கேள்வி: இன்றைய இளைஞர்களை மார்க்சியத்தின் பால் ஈர்ப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன?
பதில்: இளைஞர்கள் இயல்பி லேயே மாற்றத்தை விரும்புபவர்கள். ஆனால் எத்தகைய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது முக்கியம். வறுமை மற்றும் சுரண்டலில் இருந்து விடுபட்ட சமத்துவமான வாழ்க்கையை விரும்பும் எந்த இளைஞரும் மார்க்சியத்தை நோக்கி ஈர்க்கப்படுவார். இளைஞர்களைத் தத்துவார்த்த ரீதியாகவும், கோரிக்கைகள் அடிப்படையிலும் ஈர்ப்பதற்கான விசேஷ முயற்சிகளை மேற்கொள்வது என்று எங்களது அகில இந்திய மாநாட்டில் தீர்மானித் திருக்கிறோம்.
கேள்வி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியின் செயல்பாடு குறித்து உங்கள் எச்சரிக்கை என்ன?
பதில்: ஒன்றிய பாஜக அரசு அதி காரத்தையும், விசாரணை அமைப்பு களையும் (ED, IT) பயன்படுத்தி மாநி லக் கட்சிகளைத் தன்வசப்படுத்த முயல்கிறது. அதிமுக - பாஜக அணி என்று சொன்னாலும் அது உண்மை யில் பாஜக தலைமையிலான அணி தான். மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் பார்த்தது போல, கூட்டணி வைத்தே அந்தந்த மாநிலக் கட்சிகளை உடைப்பது, அழிப்பது, தன்வயப்படுத்திக் கொள்வதுதான் பாஜகவின் அணுகுமுறை. எனவே, அதிமுகவிற்கு அழிவுக்காலம் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிதான் இந்த அணிசேர்க்கை. கேள்வி: தமிழகத்தில் தற்போதுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பலம் மற்றும் தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? பதில்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. கடந்த பல தேர்தல் களில் மகத்தான வெற்றி பெற்றது போல, வரும் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும். தமிழக அரசு நிறை வேற்றியுள்ள சமூக நலத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் இக்கூட்டணிக்கு மக்களிடம் பெரும் ஆதரவைத் தந்துள்ளன. மதவெறி சக்திகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கேள்வி: இறுதியாக, பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவிற்கு நீங்கள் விடுக்கும் அழைப்பு என்ன? பதில்: உழைப்பாளி மக்களுடைய அடையாளமாக விளங்கக்கூடிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களு டைய இந்தச் சிலை திறப்பு விழா வில், உழைப்பாளி மக்கள் பல்லா யிரக்கணக்கில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு தத்துவத்தின் வெற்றி விழா!
