tamilnadu

img

பொய் மூட்டைகளுக்குப் பஞ்சமில்லை..!

பொய் மூட்டைகளுக்குப் பஞ்சமில்லை..!

திருப்பரங்குன்ற தூண் பற்றிய பொய்களுக்கு மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படுகிறோம். ஒரு சாமியாரோ பொய்களை மூட்டை கட்டிக் கொண்டு சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் போய் அவிழ்த்து விட்டிருக்கிறார். ராமாயணப் போர் முடிந்தபிறகு, தனது ஆயுதங்களை எல்லாம் எங்கு வைப்பது என்று ராமர் யோசித்தாராம். அதற்காக உருவாக்கியதுதான் “அஸ்திராலயா”. அதுதான் தற்போதைய ஆஸ்திரேலியா என்று அனிருத்தாச்சயார்யா என்ற சாமியார் உளறியிருக்கிறார்.  அவர் பேசியபோது, பெரிதாக பிரச்சனைகள் வரவில்லை. ஆனால் அவரது வீடியோக்கள் வைரலாகிய பிறகு, கடும் எதிர்ப்புகள் வந்துள்ளன. “நாங்க நல்லாருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா” என்று ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் எகிறுகிறார்கள்.

காலுக்குக் காப்பீடு!

கால்களுக்குக் காப்பீடு எடுத்துள்ள செய்திகள் பரபரப்பாக வெளியாகி வருகின்றன. கால்பந்து ஆட்டக்காரர்களுக்குதான் சந்தையில் அதிகமான அளவுக்கு மதிப்பு தரப்படுகிறது. அவர்களில் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான டேவிட் பெக்காம், ஒட்டுமொத்த உடலுக்கு 1,760 கோடி ரூபாய் மதிப்புக்கான காப்பீடு எடுத்திருந்தார். தற்போதை நட்சத்திர ஆட்டக்காரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரண்டு கால்களுக்கும் 1300 கோடி ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரான மெஸ்சியின் இடது காலுக்கு மட்டும் 8,100 கோடி ரூபாய் அளவுக்கு காப்பீடு தந்திருக்கிறார்கள்.  காப்பீடு அதிகம் செய்தவர்கள் பட்டியலில் கால்பந்து ஆட்டக்காரர்கள்தான் அதிகம். இவர்களுக்கு அடுத்தபடியாக டென்னிஸ் மைதானத்தில் ரசிகர்களை பரவசப்படுத்திய வீராங்கனை ஷரபோவாவும், கூடைப்பந்து ஆட்டக்காரரான லெப்ரோன் ஜேம்சும் இருக்கிறார்கள்.

இது விளையாட்டல்ல...

தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தி சிக்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையை உலக ஊக்கமருந்துத் தடுப்பு முகமை வெளியிட்டிருக்கிறது. 7,113 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 260 இந்திய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக அம்பலமாகியுள்ளது. அடுத்த இடத்தில் 11,744 சோதனைகளில் 91 பேர் என்ற நிலையில் பிரான்ஸ் உள்ளது. அடுத்தடுத்து ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி எல்லாம் இருக்கின்றன. 24,214 சோதனைகளில் 43 என்ற நிலையில் பட்டியலில் கீழே சீனா இருக்கிறது.  தொடர்ந்து ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு சிக்கிக் கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டுத்துறையை பாஜக கபளீகரம் செய்ததன் விளைவே இது என்று ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள். “ஆம் அய்யா” என்று சொல்லக்கூடியவர்கள்தான் பொறுப்புக்கு வர முடியும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவை ஏற்படுவதால் பிறமொழி கற்கிறேன்

என்னுடைய மொழி ஆங்கிலமோ, இந்தியோ அல்ல. என்னுடைய மொழி போஜ்பூரி. ஒரு படத்தை உருவாக்க வேண்டுமென்றால், பத்து, பதினைந்து பக்க வசனங்களை மனப்பாடம் செய்வது கிடையாது. அம்மொழியின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டதால் பிற மொழிகளைக் கற்றுக் கொண்டேன். பல மராத்தியப் பாத்திரங்களை ஏற்றுள்ளேன். அதனால், மராத்தியையும் கற்றுக் கொள்கிறேன். தேவை ஏற்படுவதால் பிற மொழிகளையும் கற்றுக் கொள்கிறேன். - இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயி.