tamilnadu

img

நிறங்களால் ஆனது உலகம்!

நிறங்களால் ஆனது உலகம்!

குழந்தைகளின் உலகம் நிறங்களால் ஆனது.  தொட்டில் சேலை, அதில் கட்டப்பட்ட கிலுகிலுப்பை, பால் புட்டி, பலூன், பொம்மை, நடைவண்டி என விதவிதமான நிறங்கள் குழந்தைகளின் உணர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது.  குழந்தைகள் உள்ள வீடுகளில் சுவர்களில் கட்டாயம் கோடுகள் இருக்கும். பென்சிலோ பேனாவோ வண்ண கிரையான்சை கொண்டு வரையப்பட்ட அந்த கோடுகள் ஓவியங்களாக மாறுவது அவர்களின் பெற்றோரின் கையில் உள்ளது. இப்படி வீட்டுச் சுவரில் வரைந்து பழகிய க. அருந்தமிழ் இலக்கியா தற்போது நிறங்களின் வழியே உலகம் என்ற ஓவிய கண்காட்சி நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளார். ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆனால், பென்சில், அப்ஸ்ட்ராக்ட். ஆயில் பேஸ்டல், ஸ்டிக் பென், மார்க்கர்,  மண்டேலா என  விதவிதமான ஓவியங்களில் அருந்தமிழ் இலக்கியா கலக்குகிறார். பள்ளியில் படிக்கும் போது காப்பித் தூள் கொண்டு அவர் வரைந்த ஓவியங்கள் ஊடகங்களில் பெரிதும் பாராட்டுப் பெற்றன. தற்போது  மதுரை யாதவா கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் அவர் வரைந்த விதவிதமான ஓவியங்கள் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இரண்டு நாள் ஓவிய கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டன. சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா, நகைச்சுவைச் ஜாம்பவான் நாகேஷ், பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய ஆளுமைகளின் ஓவியங்கள் பலரால் பாராட்டப்பட்டன. ஓவியரும் சிற்பக் கலைஞருமான சரண்ராஜ் திறந்து வைத்த இந்த ஓவியக் கண்காட்சியை 2000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கண்டு களித்துள்ளனர். ஓவியர்கள் ஸ்ரீரசா, வெண்புறா, அருங்காட்சியக் காப்பாளர் மருது பாண்டியன், சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் செல்வ கோமதி, தமுஎகச வாசிப்பு இயக்க மதுரை புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்ராஜ், பசுமலை பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த ஓவியக் கண்காட்சியை  தமிழ்நாடு மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது. - கமலன்