வக்பு சட்டத்தையே அடியோடு சீர்குலைக்கும் ஒன்றிய அரசு!
சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி
வக்பு சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி உரையாற்றினார். அப்போது, “ஒன்றிய பாஜக அரசு, புத்திசாலித்தனமாக நாங்கள் நடந்து கொள்கிறோம் என்று சில சட்டங்களை திருத்துவதன் மூலம் காட்டிக் கொள்கிறது. ஏற்கெனவே இருக்கும் இந்த சட்டம் செல்லாது என்று மக்களவையில் புதிதாக ஒரு சட்டம் இயற்ற முடியாது என்பதால், அதற்கு பதிலாக, இருக்கும் சட்டங்களை திருத்துகிறோம் என்ற பெயரில் வக்பு வாரிய சட்டத்தை நீர்த்துப்போகச் செய்கிற- இந்த சட்டத்தின் உயிரோட்டத்தை பறிக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வக்பு வாரியச் சட்டத்தில் 117 திருத்தங்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஒரு சட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட திருத்தங்களை செய்தால் அந்த சட்டம் எப்படி இருக்கும்? அதாவது, ஏற்கெனவே இருக்கும் வக்பு வாரிய சட்டம் செல்லாது என்று சொல்லிவிடலாம். ஏன் என்றால், 117 திருத்தங்களை செய்தால் ஏற்கெனவே இருக்கும் அந்த சட்டம் நீர்த்துப்போகும். அந்த வகையில்தான் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்தார்கள். தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்தார்கள். விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை கொண்டு வந்தார்கள். அந்த சட்டத்தை திரும்ப பெறுவதற்காக 700 விவசாயிகள் உயிர் தியாகம் செய்தார்கள். சட்டத்தில் உள்ள ஒரு புள்ளி, காமாவை கூட எடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்த பாஜக, விவசாயிகளின் 400 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அந்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றது. அப்படித்தான், தற்போது நம்முடைய அரசியல் சட்டம் மத சுதந்திரத்திற்கு வழங்கியிருக்கும் உரிமையை பறிக்கிறது. குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்கும் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த வக்பு வாரிய திருத்தத் சட்டம். திருத்தம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திய கூட்டுக்குழு, ஜனநாயக ரீதியாக செயல்பட அனுமதிக்கவில்லை. உதாரணத்திற்கு, அந்த கூட்டுக் குழுவில் உள்ள ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, அந்தச் சட்டம் குறித்து கருத்துக்களை தெரிவிக்க நாட்களை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதைக்கூட கூட்டு நடவடிக்கை குழு ஏற்றுக்கொள்ளாமல் அவசர கதியில் சட்டத்தை நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் சட்டத்தை மனதார ஆதரிக்கிறோம்” என்று நாகை மாலி கூறினார்.