பெரம்பூரில் குடிசைகளை உரசி செல்லும் மின் கம்பிகள்
உடனே சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
மயிலாடுதுறை, மார்ச் 30- மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமம், அகர தோப்புத் தெரு பகுதியில் குடிசைகளை ஒட்டியவாறு உயர் அழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனேயே நாட்களை கடத்துவதாக வேதனையுடன் கூறுகின்றனர். பெரம்பூர் அகரத்தோப்பு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் வசிக்கக்கூடிய இப்பகுதியில், மக்களுக்கான அடிப்படை வசதிகள் இதுவரை முறையாக இல்லை என்ற நிலையில், குடியிருப்புகளுக்கும், தெருவிளக்குகளுக்கும் விநியோகிக்கப்படும் மின்சாரம் செல்லும் மின்சார கம்பிகள் கடந்த பல ஆண்டுகளாக மிக தாழ்வாகவே இருப்பதால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்துடனேயே வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள், இதனை சீரமைக்கக் கோரி கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து, மனுக்களை அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையென குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குத்தாலம் ஒன்றியச் செயலாளர் சி. விஜயகாந்த் கூறும்போது, தமிழ்நாடு மின்வாரிய கிளியனூர் பிரிவு அலுவலக மேற்பார்வையில் உள்ள இப்பகுதியில், உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்வதால், பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். மின் கம்பங்கள் அனைத்துமே பழுதடைந்து காணப்படுகிறது. மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. உடனடியாக மின்வாரியத்தினர் சீரமைக்கவில்லையெனில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார்.