tamilnadu

img

மதுரை மக்களின் கவனம் ஈர்த்த செந்தொண்டர் அணிவகுப்பு

மதுரை மக்களின் கவனம் ஈர்த்த செந்தொண்டர் அணிவகுப்பு

‘தென்னகத்தின் ஏதென்ஸ்’, ‘தூங்கா நகரம்’ எனப் பெயர்பெற்ற மதுரை நகரில், இந்திய உழைப்பாளி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 24-ஆவது அகில இந்திய மாநாடு, ஏப்ரல் 2 முதல் 6 வரை  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டின் நிறைவாக, ஞாயிறன்று மாலை மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பும் - லட்சக்கணக்கானோர் திரண்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரணிகள் - பொதுக்கூட்டங்கள் வழக்கமான ஒன்று தான், என்றாலும்; சிபிஎம் நடத்திய செந்தொண்டர் அணிவகுப்பு - பொதுக்கூட்டம் அவற்றிலிருந்து வேறுபட்டது என்பதை மதுரை மக்கள் மீண்டும் ஒருமுறை கண்டனர். செந்தொண்டர் அணிவகுப்பானது, ஒரு ராணுவம் போல, பல ரெஜிமெண்ட்களாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ரெஜிமெண்ட்டிற்கும் ஒவ்வொரு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.  பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சிங்காரவேலர், பி. ராமமூர்த்தி, ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித், என். சங்கரய்யா, கே.பி. ஜானகியம்மாள், பி. சீனிவாசராவ், ஆர். உமாநாத், பாப்பா உமா நாத், கேப்டன் லட்சுமி, வி.பி. சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன், கே.எம். ஹரிபட், மதுரைத் தியாகி லீலாவதி, மைதிலி சிவராமன், சோமசுந்தரம், செம்புலிங்கம் உட்பட 20-க்கும் மேற்பட்ட மறைந்த தலைவர்கள் - தியாகிகளின் பெயரில் படைப்பிரிவுகள் அணி வகுத்து வந்தன. இவை தவிர, தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் நலனுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகள், தலைவர்களின் பெயர்களிலும் படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களின் பதாகைகளைத் தாங்கியபடி செந்தொண்டர்கள் மிடுக்குடன் அணிவகுத்தது, காண்போரை ஈர்த்தது. மாநாட்டுப் பேரணி, செஞ்சட்டை, செங்கொடி, சிவப்பு வேட்டி, சிவப்புத் தெப்பியுமாகவே காட்சியளித்தது. சிவப்பு - வெள்ளை நிறத்திலான சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட குடைகளை பெண்கள் பலர் பிடித்துச் சென்றனர். செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெறுவதற்கு முன் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த வர்கள், பேரணி என்று தனியாக அறிவிக்கப்படாவிட்டாலும் அவர்களாகவே சிவப்புக் கொடி களுடன் குழுக்களாக ஒன்றிணைந்து ஆங்காங்கே முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக பொதுக்கூட்டத் திடலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரல் மார்க்ஸ், சேகுவேரா வேடமணிந்தும், மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், மும்மத அடையாளங்களையும் ஏற்றபடியும் தோழர்கள் வந்திருந்தனர். ஜிந்தாபாத்.. ஜிந்தாபாத் சிபிஐ(எம்) ஜிந்தாபாத்... வாழ்க வாழ்க வாழ்கவே... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்கவே..! உயரட்டும் உயரட்டும் வானில் செங்கொடி உயரட்டும்.. தகரட்டும் தகரட்டும் தனியுடமை தகரட்டும்... மலரட்டும் மலரட்டும்.. பொதுவுடமை மலரட்டும்.. எதிர்காலம்  உழைக்கும் வர்க்கத்திற்கே... சோசலிசத்திற்கே என்ற முழக்கங்களையும் எழுப்பினர். முதல்படைப்பிரிவு மஸ்தான்பட்டி டோல்கேட் அருகே உள்ள (RIO) மருத்துவமனையை வந்த டைந்தபோது மணி சரியாக மாலை 6.08. செந்தொண்டர் அணி வகுப்பு முழுமையாக இந்த  இடத்தை கடந்து சென்றது இரவு 7.10 மணிக்குத் தான். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மறைந்த  தலைவர்களின் பதாகைகளைத் தாங்கி வந்தனர். அவர்கள் சமயோசிதமாக யோசித்து இருளிலும் தலைவர்களின் முகங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக அதில் எல்இடி விளக்குகளைப் பொருத்தியிருந்தது தனிச்சிறப்பாகும். நான்கு  வழிச்சாலையின்  ஒரு  பகுதியில்  பேரணிக்கு  அனுமதி   வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்தப் பகுதியை முழுமையாக செந்தொண்டர் படையால் பயன்படுத்த முடியவில்லை. காரணம், தமிழகம், கேரளம் மாநிலத்திலிருந்து வந்திருந்தவர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்றிருந்ததால், அணிவகுப்பு சாலையின் எஞ்சிய பகுதியிலேயே நடைபெற்றது. கேரளத்திலிருந்து வந்திருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் கம்பீரமாகவும், தனித்துவ மிக்கதாகவும் இருந்தது. மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்து, இருள் சூழ்ந்தது. நான்குவழிச்சாலையில் விளக்குகள் எரிந்தாலும், விளக்கின் வெளிச்சத்தையும் மிஞ்சி செஞ்சட்டைகளும், செங்கொடி களும் இருளை கிழித்துச் சென்றது, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

பேரணியில் பார்த்ததும்... கேட்டதும்...

செந்தொண்டர் அணிவகுப்பு - பொதுக்கூட்டத்தில் தமிழகம், கேரளம் மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், பேரணிக்கு  திருப்பூர் மாவட்டம் உடுமைலைப்பேட்டையை அடுத்த குரல்குட்டை பகுதியிலிருந்து வந்திருந்த ஈஸ்வரி (52) என்பவரிடம் பேசியபோது, “நாங்கள் விவசாயக் கூலித் தோழர்கள். 100 நாள் வேலைக்குச் செல்கிறோம். எங்களுக்கு இன்னும் மூன்று மாதம் ஊதியம் வழங்கவில்லை. இருந்தாலும் நாங்கள் ஒவ்வொருவரும் ரூ. 1,300 செலுத்தி பேருந்தில் வந்தோம். எங்களுக்காகப் போராடும் கட்சியின் மாநாட்டிற்கு, எங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து வந்துள்ளோம். தேவையான உணவை கையில் கொண்டு வந்துவிட்டோம்” என்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்மலைப்பகுதியைச் சேர்ந்த அஞ்சு (41)  என்பவர் கூறுகையில், “இதுவரை தான் திருச்சிராப்பள்ளியைத் தாண்டி எந்தக் கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதில்லை. முதல் முறையாக இப்படி ஒரு பெரிய அளவிலான கட்சி மாநாட்டில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வண்டிக்கான வாடகையை என்னோடு வந்தவர்கள் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டோம்” என்றார். திருப்பூர் மாவட்டம் நடுவேலம்பாளையம் பகுதியில் இருந்து வந்திருந்த  பெண்களிடம் பேசியபோது, எங்களது உறவினர்கள் பிள்ளைகளான அர்ஜுன் (12), ஹரிகர் (12), சஞ்சய் (14)  ஆகியோர் செந்தொண்டர் அணி வகுப்பில் பங்கேற்கின்றனர். அவர்களைப் பார்க்கவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் வந்துள்ளதாக கூறினர். திருவள்ளூர் மாவட்டம் கடம்புத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த விறகு வெட்டும்  தொழிலாளர்கள், விவசாயிகளிடம் பேசியபோது, “தலா 1,000 ரூபாய் பணம் போட்டு வண்டி பிடித்து அணிவகுப்பு - பொதுக்கூட்டம் பார்க்க வந்துள்ளோம்” என்றனர். தொழிலாளர்களாகிய நீங்கள் எப்படி ஒரே தவணையில் பணத்தைக் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, “இல்லை... மூன்று மாதம் தொடர்ந்து சிறு சிறு தொகையாகக் கொடுத்தோம்” என்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு மாநாட்டிலும் பங்கேற்றுவரும் ஆலப்புழாவை சேர்ந்த வி.கே. சுகுமாரன் (92) செந்தொண்டர் பேரணியைப் பார்க்க கையில் கொடியுடன் வந்திருந்தார்.