கந்தர்வக்கோட்டையை பேரூராட்சியாக அரசு தரம் உயர்த்த வேண்டும்!
சட்டமன்றத்தில் எம். சின்னத்துரை எம்எல்ஏ வலியுறுத்தல்'
கந்தர்வக்கோட்டை ஊராட்சியைப் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று எம். சின்னத்துரை எம்எல்ஏ சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை மேலும் பேசியிருப்பதாவது: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி! கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு இரண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டிக் கொடுப்பதாக அறிவித்திருக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் ஒன்றியத்தில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்த அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பேரூராட்சியாக தரம் உயர்த்துக! கந்தர்வக்கோட்டை ஊராட்சி மன்றத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். காரணம், இந்த ஊராட்சி மன்றம் ஒரு தொகுதியின் தலைநகரமாகும். பெரம்பலூர் - மானாமதுரை சாலையில் இருக்கும் மிக முக்கியமான பகுதி. மக்கள் தொகையும் அதிகம் இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான பணிகள் ஒரு பேரூராட்சிக்கு உரிய அளவில் அதிகமாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்கள் உட்பட 15 பேர் இருந்தும் தினசரி பணிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே, கந்தர்வக்கோட்டை ஊராட்சி மன்றத்தை பேரூராட்சி மன்றமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஆபத்தை விளைவிக்கும் குப்பை கிடங்கு கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் எல்லையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், அந்தப் பகுதியில் நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்து, அதன் அருகில் உள்ள சாலையில் செல்வோருக்கு பெரும் விபத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, துருசிப்பட்டி, புதுநகர், பழைய கந்தர்வக்கோட்டை, மெய்க்குட்டி பட்டி மற்றும் எஸ். சோழகம் பட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கந்தர்வக்கோட்டை ஊராட்சி மன்றத்தில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுகிறேன். ரியல் எஸ்டேட் கும்பல் அட்டூழியம்! புதுக்கோட்டை ஒன்றியம், திருமலைராய சமுத்திரம் ஊராட்சி மன்றத்தில் உடையநேரி காலனி என்ற ஒன்று இருக்கிறது. இதில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த இடம், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட்ட இடம். அந்த இடத்திற்கு ரியல் எஸ்டேட் நபர்கள் போலியாக பட்டா செய்திருக்கிறார்கள். ஏழை - எளிய மக்கள் குடியிருக்கும் அந்த இடத்திற்கு பட்டா வழங்காத காரணத்தால், மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பிறகும் கூட அடிப்படை வசதிகளான தெரு விளக்குக் கூட அமைத்துக் கொடுக்கவில்லை. குடிநீர் வசதி செய்து தரவில்லை. சாலையை அமைத்துக் கொடுக்கவில்லை. தாயகம் திரும்பியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அரசு பாதுகாக்க வேண்டுமே தவிர, ரியல் எஸ்டேட் காரர்கள் இடம் ஒப்படைத்து விடக்கூடாது. கிராமங்களை பாதிக்கும் கோழிப்பண்ணைகள்! கந்தர்வக்கோட்டை தொகுதி செங்கழுர் ஊராட்சியில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இந்தக் கோழிப்பண்ணையின் கழிவுகளை வெளியே கொட்டுகின்றனர். அவற்றைத் தின்பதற்காக நாய்கள் அதிகமாக நடமாடி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. கோழிக்கழிவுகள் கிடைக்காத நேரத்தில் மனிதர்களையும் நாய்கள் கடிக்கின்றன. இதில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 ஆடுகளையும், ஒரு எருமை மாட்டையும் கடித்து சாகடித்து இருக்கின்றன. மேலும் செங்களூர், கண்ணமுடையான் பட்டி, மேல்பட்டி, நத்தம் பட்டி, ராசப்பட்டி ஆகிய கிராம மக்கள் மிகப் பெரும் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அங்கே, ஏற்படக்கூடிய பதற்றத்தால் காவல் வழக்கு என்று ஒரு கிராமமே பாதிக்கிறது. எனவே, ஒன்று அந்த தனியார் பண்ணையை மூட வேண்டும். இவ்வாறு எம். சின்னத்துரை சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.