tamilnadu

கேரளத்தை பொருளாதார ரீதியாக நசுக்கும் பாஜக அரசு!

கேரளத்தை பொருளாதார ரீதியாக நசுக்கும் பாஜக அரசு!

சத்தியாகிரகத்தில் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், ஜன. 11 - கேரளத்தை எப்படியெல்லாம் பொரு ளாதார ரீதியாக நசுக்குவது என்பதில் தான், ஒன்றிய பாஜக அரசு குறியாக உள்ளதாக முத லமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். இதற்காகவே, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் உட்பட பல்வேறு துறைகளில் கேரளம் நிகழ்த்தியிருக்கும் பெருமைமிக்க சாதனை களை அழிப்பது; நலத்திட்டங்களை ஒழித்துக் கட்டுவது, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களையும் துன்புறுத்து வது ஆகிய நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது; பிரதமரின் பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியைக் கூட கேரளத்திற்கு வழங்காமல் முடக்கி வைத்துள்ளது என்றும் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். கேரளத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் பொருளாதார முற்றுகையை எதிர்த்து பாளை யம் தியாகிகள் மண்டபம் முன்பு சத்தியாகிரகப் போராட்டத்தை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திங்கட்கிழமையன்று துவக்கி வைத்து  உரையாற்றினார். அப்போது, மேலும் அவர் பேசியதாவது: நமது மாநிலம் போராடிக் கொண்டி ருக்கிறது. இந்தப் போராட்டம், நமது நாட்டின் மற்றும் அதன் மக்களின் உயிர்வாழ்விற்கான போராட்டம். இந்திய நாட்டில் ஒரு மாநில மாக, அரசியலமைப்பு ரீதியாக நமக்கு உரிமை யுள்ள பல விஷயங்கள் நம்மிடமிருந்து பறிக்கப் படுகின்றன. இன்று, தங்கள் கைகளில் அதிகப்படியான அதிகாரம் இருப்பதாக நினைக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களால் பாரபட்சமாகப் பறிக்கப்படும் நமது உரிமை களைப் பாதுகாக்க நாம் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதிகார குவிப்பும்  அரசியல் தடைகளும் சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றிய அரசிடமுள்ள அதிகப்படியான அதிகாரக் குவிப்பு ஆகும். இது நமது நாட்டின் மாநிலங்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலாகும். சட்ட மன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக் கள் காலவரையின்றி கிடப்பில் போடப்படு கின்றன. மாநில விவகாரங்களில் தலையிடுவது மற்றும் சட்டங்களை இயற்றுவது உள்ளிட்ட ஜன நாயக விரோத நடைமுறைகள் தடையின்றி தொடர்கின்றன. மாநிலங்களில் பாஜக விரும்பும் அரசாங்கம் ஆட்சியில் இருந்தால், இஷ்டத் திற்கு மானியங்களை அள்ளி வழங்கு கிறார்கள். அதற்கான அதிகாரங்களைப் பயன் படுத்துகிறார்கள். இவ்வாறு மானியங்களை வழங்குவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவை உரிய நடைமுறைகளின் படி வழங்கப்பட வேண்டும். மாறாக, பாஜகவுடன் ஒத்துப்போகாத அரசியல் கட்சிகள் தலைமை யிலான அரசாங்கங்கள் மீது, அரசியல் ரீதியாக நிதித் தடைகள் விதிக்கப்படுகின்றன. 2018 வெள்ளத்தின் போது கேரளத்திற்கு வெளி நாட்டு உதவியைப் பெறுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. வயநாடு இயற்கை பேரழிவின் போதும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உத வியைக் கூட ஒன்றிய அரசு  மறுத்தது. இவை நம் முன் உள்ள சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! வெகுவாகக் குறைந்த வரிப் பங்கீடு மக்கள்தொகை கட்டுப்பாடு உட்பட கேரளம் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகள் காரண மாக, நிதி ஆணையத்திடமிருந்து கேரளம் பெறும் வரிப் பங்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2000-05 ஆம் ஆண்டில் நமக்கான  வரிப் பங்கு 3.05 சதவிகிதமாக இருந்தது. 2020-26ஆம் ஆண்டில் இது 1.92 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.  இந்த நிதி அழுத்தத்தை மாநிலம் எதிர்கொள்ளும் போது தான், மானியங்கள் மற்றும் கடன் வரம்புகள் அடிப்படையில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறையும் நம்மைப் பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக் கிறது. ஜனநாயக விரோத அணுகுமுறைகளை எடுத்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக கேரள அளவில் ஒன்றுபட்ட வெகுஜனக் கருத்து எழு வது கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற  மதிப்புகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான தாகும். கெடுவாய்ப்பாக, இந்த விசயத்தில் கூட காங்கிரசும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒருமித்த கருத்தை உருவாக்கத் தயாராக இல்லை. மிகக் குறுகிய அரசியல் இலக்கு களுக்காக மாநில அரசு நிதி ரீதியாக நசுக்கப்படும் போது, அதனைக் கேள்விக்கு உட்படுத்தாமல், இதன்மூலம் நமக்கு ஏதாவது அரசியல் ஆதா யம் கிடைக்குமா? என்று தான், இங்குள்ள எதிர்க்கட்சி கொண்டுள்ளது. இது மாநில நலன் களுக்கு முற்றிலும் எதிரான அணுகுமுறை. கேரளம் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களையும் அணி திரட்டி மிகவும் வலுவாகக் குரல் எழுப்ப வேண்டிய கடமையை இடது ஜனநாயக முன்னணி நிறைவேற்றி வருகிறது. பொய் பிரச்சாரமும்   நிதி ஒடுக்குமுறையும் மாறாக, கேரளத்தின் கடனுக்கு, நிதி வீணடிக்கப்படுவதுதான் காரணம் என்பது அவர்களது பிரச்சாரம். C&AG டிசம்பர் 2025 இல் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் அட்டவணை 5.2 இன் படி, 2023-24 ஆம் ஆண்டில் கடன் வாங்கியதில் 56.29 சதவிகிதம் மூலதனச் செலவினங்களுக்காகப் பயன்படுத் தப்பட்டது. ஆனால், கேரளம் அன்றாடச் செலவு களுக்காகக் கடன் வாங்கிக் கொண்டிருப்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மாநிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் வரி தான், ஒன்றிய அரசுக்கான வருவாய் ஆகும். இவ்வாறு வசூலிக்கப்படும் வருவாயின் ஒரு பகுதியை, மானியங்கள் வடிவில் மாநிலங் களுடன் பகிர்ந்து கொள்வது ஒன்றிய அரசின் அரசியலமைப்புக் கடமையாகும். நிதிப் பகிர்வு ஒன்றும் ஒன்றிய அரசின் கருணை யல்ல. ஆனால், பிராண்டிங் உள்ளிட்ட பிரச்ச னைகளை மேற்கோள் காட்டி மாநிலத்திற்கான உதவியை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்கிறது. தடையையும் மீறி நடக்கும்  மூலதனச் செலவுகள் எனினும், இவற்றாலெல்லாம், கேரளத்தை  அழிக்கவோ பலவீனப்படுத்தவோ முடியாது என்பது, ஒன்றிய அரசுக்கும், கேரளத்திலுள்ள எதிர்க்கட்சிக்கும் நன்றாகவே  தெரியும். பற்றாக்குறை  இருந்தபோதிலும், கேரளத்தில் மக்கள்நல நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள், புதிய தொழில்களை உறுதி செய்தல் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு கேரள அரசு அதிக பணத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறது. நலத்திட்டங்களை அதிகரித்தல், பெண்களுக்கு வருமானத்தை உறுதி செய்யும் மகளிர் பாதுகாப்புத் திட்டம், இளைஞர்களுக்கான வேலை இணைப்புத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ/டிஆர் நிலுவைத் தொகையை வழங்குதல் போன்ற முடிவுகள் எதிர்க்கட்சிகளை சங்கடப்படுத்தியுள்ளன. இந்த மக்கள் நல நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றிய அரசு கடன்களையும் வெட்டிக்குறைக்கிறது. ஒன்றிய அரசுக்கு அடிபணிய மாட்டோம் எனினும், ஒன்றிய அரசுக்குக் கீழ்ப்படியும் கொள்கை அணுகுமுறையை கேரளம் ஏற்கவில்லை. கேரளத்தின் உரிமைகளுக்காக தில்லியில் மாநில அரசு ஒரு போராட்டத்தை நடத்தியது. உச்ச நீதிமன்றத்தை அணுகியது. நமது கோரிக்கைகளில் உண்மை இருப்பதைக் கண்டறிந்த உச்ச நீதிமன்றம், மனுவை அரசியலமைப்பு அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளது.  தற்போது ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, அனைத்து கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மாநிலம் முழுவதும் ஒரு மக்கள் போராட்டம் எழுந்து வருகிறது என்பதற்கான எச்சரிக்கையாகவே சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியுள்ளது. கேரளத்தின் மூன்றரை கோடி மக்களுக்கு வர வேண்டிய பணத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தும் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிராக கேரளம் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.  இவ்வாறு பினராயி விஜயன் பேசினார். சத்தியாகிரகப் போராட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், சிபிஐ மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.