சிபிஎஸ்இ பள்ளி என 18 ஆண்டுகளாக ஏமாற்றி
பல கோடி சுருட்டிய அழகு ஜோதி அகாடமி பள்ளி
மயிலாடுதுறை, மார்ச் 21- மயிலாடுதுறை காவேரி நகரில் அழகுஜோதி அகாடமி வித்யாலயா என்ற பள்ளி கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மழலையர் வகுப்புமுதல் 5-ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. மாநில கல்வி பாடத்திட்டத்தின் (பிரைமரி அண்ட் நர்சரி) அனுமதியை வைத்துக் கொண்டு சிபிஎஸ்சி பள்ளி என்று கூறி பாடம் நடத்தியதுடன், கல்விக் கட்டணமாக பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கடந்த 2 வாரமாக புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்துக்காக பெற்றோர் சுமார் 200 பேர் வியாழன் மாலை 4 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளனர். ஆனால், இரவு 7.30 மணியைக் கடந்தும் நிர்வாகத்தின் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால், பள்ளியின் முன்பு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் அங்கீகாரம் குறித்து கேள்வி கேட்டால், பள்ளி நிர்வாகத்தினர் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சனிக்கிழமையன்று வட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை சேர்க்கும்போது சிபிஎஸ்சி இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் ஸ்கூல் என பொய் சொல்லி ஏமாற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் பல லட்சம் பணம் பறித்ததாகவும், இதுபற்றி கேட்ட பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளியை இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு எழுதி, பெற்றோர்கள் கையொப்பமிட்டு காவல்துறையினரிடம் வழங்கினர்.
பள்ளி உரிமையாளரை கைது செய்ய வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
பெற்றோர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அழகு ஜோதி அகடாமி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை களை எதிர்த்து, நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். அழகு ஜோதி அகாடமி பள்ளி, ஒரு மாணவருக்கு தொடக்க நிலை வகுப்புகளிலேயே பல லட்சம் ரூபாய் வசூல் செய்யும் பள்ளியாகும். மேலும், அனுமதி பெறாத பள்ளியை சிபிஎஸ்இ பள்ளி என பொய் சொல்லி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றியுள்ளது. இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது! எனவே, மாவட்ட பள்ளிக் கல்வி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அந்த பள்ளி நிர்வா கத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். அத்துடன், அந்த பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிக ளிலும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த வேண்டும். பள்ளிகள் தரமான கல்வி வழங்கு கிறதா? சுற்றுப்புற சூழல் பாதுகாப்பானதா? வகுப்பறைகள் தரமானவையா? அடிப்படை வசதிகள் போதுமானவையா? பள்ளி வாக னங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களின் அணுகுமுறையும் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்ய வேண்டும். அழகு ஜோதி அகாடமி பள்ளிக்கு மாநில அரசின் தனியார் பள்ளிக்கான அங்கீகாரம் உள்ளதா? இந்த விவரங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வா கத்தால் ஆய்வு செய்யப்பட வேண்டும். அழகு ஜோதி அகாடமி பள்ளியின் மீது மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டம் தொடரும் என சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.அமுல் காஸ்ட்ரோ, மாவட்டச் செயலாளர் பி. மணிபாரதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.