ரிக்கெட் வாரியம் என்பது “சரிங்க அய்யா... ஆமாங்க அய்யா.. என்ன செய்யணும் அய்யா” என்பதாக தற்போது உள்ளது. அவ்வளவுதான். அரசியல்வாதிகள் அதற்குள் நுழைந்து அழித்து விட்டார்கள். கிரிக்கெட்டும் சரி, விளையாடுபவர்களும் சரி, முன்னைப் போல இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.
தொடரும் பாரம்பரியம்!
எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும், அதைக் கேலிச்சித்திரத்துடன் கூடிய விளம்பரமாக மாற்றுவது “அமுல்” நிறுவனத்தின் உத்தியாகும். கூட்டுறவுத்துறையின் வெற்றிக்கு அடையாளமாக இந்த நிறுவனம் உள்ளது. இதைத் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடுகள் இன்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த ஊரே வறுமையில் இருந்து விடுபட்ட அனுபவம்தான் அமுலின் தொடக்கமாகும். இந்த நிறுவனம் வெளியிடும் கார்ட்டூன்கள் அதிகம் பார்க்கப்படுபவையாகும். அவற்றிற்கு ரசிகர்களே உண்டு. தேர்வு செய்யப்பட்ட கார்ட்டூன்களைத் தனிப் புத்தகமாகவே வெளியிட்டிருக்கிறார்கள். அண்மையில் லோகா படம் வெளியானபோது, அதன் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், அதிக வெண்ணெய் தடவப்பட்ட ரொட்டித் துண்டுடன் காட்சியளிப்பது போன்ற படத்தை அமுல் காட்சிப்படுத்தியது. இது பெரும் வரவேற்பை பெற்றது. படமும் வெற்றிகரமாக ஓடியது. படம், கார்ட்டூன், அமுல் விற்பனை எல்லாம் அமோகம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். சில மாதங்களுக்கு முன்பாக டிரம்ப்-எலான் மஸ்க் மோதலை விவரிக்கும் கார்ட்டூனை அமுல் வெளியிட்டது. சர்வதேச அளவில் அந்தக் கார்ட்டூன் பிரபலமானது. அமுலின் பாரம்பரியம் தொடர்கிறது.
இலவச விளம்பரம்..!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான படங்களாக எடுத்துத் தள்ளும் இயக்குநர் மோகன் ஜியின் “திரவுபதி 2” படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்திருக்கிறது. யாருடைய படம் என்று சொல்லாமலேயே தனது நட்பைப் பயன்படுத்திக் கொண்டு பாடகி சின்மயியை அழைத்து, இசையமைப்பாளர் கிப்ரான் பதிவு செய்து கொண்டார். விஷயம் தெரிந்தவுடன் பதறிப்போன சின்மயி மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த படங்கள் ஊற்றிக் கொண்டதால் வருத்தத்தில் இருந்த மோகன் ஜி இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முயல்கிறார். சமூக நீதிக்கு எதிரான அமைப்புகள் இவருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கிறார்.
பறவைகள் தற்கொலை!
வடகிழக்கில் உள்ள அசாம் மாநிலத்தில் ஜாதிங்கா என்ற ஊருக்குள், பறந்து நுழைந்து பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன என்ற செய்தி நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உள்ள அமாவாசை நாட்களில் இது நடக்கிறது. 2025 ஆம் ஆண்டிலும் இது நடந்துள்ளது. மனிதன் அறிய முடியாத செயல் என்று வழக்கம்போல அப்பகுதி மக்கள் சொன்னாலும், பனி மூட்டம், இருட்டு, தாழ்வாகப் பறப்பது ஆகியவையே காரணம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நிஜ நாயகி
பழைய ஆனந்தவிகடன் குமுதம் ஜோக்ஸ் மாதிரி - நடிகைகள் மக்குகள் மங்குணிகள் இல்லை. எத்தனை எத்தனையோ நடிகைகள் அரசியல் அரங்கிலும், சமூகப் பொறுப்பிலும் தம் இருப்பை நிரூபித்து வருகிறார்கள். 2024 கேன்ஸ் திரைப்படவிழாவுக்குப் போன நம் இந்திய நடிகை கனி குஸ்ருதி - பாலஸ்தீன நாட்டுக் கொடியை ஓர் ஆதரவுக் குறியீடாக கைப்பை வடிவில் கொண்டுசென்றது - ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்தது. நவம்பர் 14 முதல் 23 வரை நடந்த அல்மேரியா சர்வதேச திரைப்பட விழாவில் (FICAL) - Tierra de Cine Award விருதை வாங்கச் சென்ற ஸ்பெய்ன் நடிகை அட்ரியானா உகர்த்தே - சும்மா கும்பிடு போட்டு விருதை வாங்கிவிட்டு வந்துவிடவில்லை. ரெண்டு வார்த்தை பேச வாய்த்தபோது, “பாலஸ்தீன காஸாவில் இஸ்ரேல் இன்னமும் போர் நிறுத்தம் செய்யவில்லை” என்றும் - “அங்கு இனப்படுகொலை நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை” என்றும் இஸ்ரேல் நெதன்யாகுவின் செவுளில் அறைந்துவிட்டு வந்திருக்கிறார். “போர்நிறுத்தம் என்று விடுக்கப்படும் அறிக்கைகளை நம்பி உலகம் ஏமாற வேண்டாம்” என்ற அட்ரியானா, “மோதல் பகுதிகளில் சிக்குண்ட மக்களுக்கு மருந்துகள், உணவு, தண்ணீர், மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வழிகள் இன்னும் முழுமையடையவில்லை” என்று நிலவரத்தை சுட்டினார். இந்த ஊடகங்களெல்லாம் உண்மை நிலையை ஏன் முழுமையாக வழங்கவில்லை என்று வெளுத்தார். “வன்முறை அமைப்புகளை இன்னும் கைவிடாத இஸ்ரேலுக்கு சர்வதேச வர்த்தகம், இராஜதந்திர உறவு , ஆயுதம் தொடர்பான உதவிகளை பலநாடுகள் தொடர்ந்து செய்கின்றன” பன்னாட்டு சமூகத்தின் காதுகளில் கேட்கும்படி உரத்து ஒலித்துவிட்டு வந்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது அவமானம்! ஆனால் இழிவை துடைத்துப்போட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் போகும் ஆட்சியாளர்களுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது இல்லையா? வாழ்க அட்ரியானா உகர்த்தே!
