அறிவியல் கதிர் - ரமணன்
பயண அயர்ச்சியும் இசையின் நிவாரணமும்
பயணத்தின் போது சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்படும். அதிலும் சுற்றிச் சுற்றி செல்லும் பாதையாக இருந்தால் கூடுதலாக இருக்கும். இது பயணக் காய்ச்சல் (motion sickness) என்றழைக்கப்படுகிறது. இது போன்ற நேரங்களில் மனதுக்கு உற்சாகமளிக்கும் பாடல்களைக் கேட்பது நிவாரணமாக இருக்கலாம் என்கிறது சீனாவின் ஹெனான் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்தயிலான் லி தலைமையிலான நரம்பியல் அறிஞர்கள் குழு நடத்திய ஆய்வு. இந்த ஆய்வில் 30 பங்கேற்பாளர்களுக்கு செயற்கையாக பயணக் காய்ச்சல் ஏற்படுத்தப்பட்டது. இயல்பு நிலையிலிருந்து பயணக் காய்ச்சல் நிலைக்கு மாறி பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் போது அவர்களது மூளையில் ஏற்படும் மாறுதல்களை பதிவிடும் எலெக்ட்ரோ என்செபாலோ கிராப் எனும் கருவியை அவர்கள் அணிந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். வாந்தி ஏற்படுத்தும் பயணத்திற்குப் பின், நான்கு குழுக்கள் ஒரு நிமிடம் பாடலைக் கேட்டனர். இன்னொரு குழுவினர் எந்தப் பாடலையும் கேட்கவில்லை; அதற்குப் பதிலாக ஒரு நிமிடம் தியானம் செய்தனர். இன்னொரு குழுவினர் வாந்தி உணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பயணத்தை முடித்துக் கொண்டனர். தியானம் செய்தவர்களைவிட மகிழ்ச்சியான பாடல் கேட்டவர்களுக்கு 14% உம் மெல்லிய இசை கேட்டவர்களுக்கு 13.4%உம் சிரமம் குறைந்தது; இன்னொரு வகை இசையானது சிரமம் தானாகவே குறைவதற்கு காத்திருந்தவர்களை விட மோசமாக இருந்தது. சோகப் பாட்டு தலை சுற்றல் உணர்வை இன்னும் கடினமாக்கியது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்பாளர்களைக் கொண்டு செய்யப்பட்டதால் இந்த ஆய்வின் முக்கியத்துவம் எவ்வளவு என்று சொல்வது கடினம். ஆனால் இசை நமது உணர்வை மேம்பட்டதாகவோ அல்லது மோசமாகவோ மாற்றுகிறது என்கிற பிற ஆய்வுகளுடன் இது ஒத்துப் போகிறது. காட்சிகளால் விளையும் அயர்ச்சி, மெய் நிகர் கருவிகளால் ஏற்படும் சைபர் அயர்ச்சி, குடிபோதையால் ஏற்படும் ஹேங் ஓவர் போன்றவற்றிற்கும் நமக்கு பிடித்த இசையை கேட்பதால் நிவாரணம் கிடைக்கிறது என்று இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டியுள்ளன. பயண அயர்ச்சி அதிகம் இருக்கும்போது மூளை குறைவான பணிகளையே செய்வதையும் அதிலிருந்து விடுபட்ட பின் பலவித செயல்பாடுகளை செய்வதையும் எலெக்ட்ரோ என்செபாலோ கிராப் பதிவுகள் காட்டின. இந்த ஆய்வு Frontiers in Human Neuroscience என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் தெரிவிக்கிறது.
சாமுராய் வீரர்களும் முழங்கால் வலுவும்
முதியவர்களுக்கு கீழே விழுந்து அடி படுவது என்பது நிகழக்கூடிய ஒரு ஆபத்து. அவர்களுக்கு கால் முட்டியை பலப்படுத்துவது இந்த ஆபத்தை தவிர்க்க உத வும். ஜப்பானில் சாமுராய் வீரர்கள் பின்பற்றிய ரெய்- ஹோ எனும் பயிற்சி இதற்கு உதவுகிறது என்று டொஹூகு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த ஒரு ஆய்வு காட்டுகிறது. ரெய்-ஹோ என்பது கவனமாக உட்காருவது, நிற்பது மற்றும் நடப்பது அடங்கியது. எளிதாக செய்யக்கூடியது; கருவி கள் எதுவும் தேவை இல்லை; தினமும் ஐந்து நிமி டம் செய்தாலே பலன் கிடைக்குமாம். இந்த சோதனையில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான 34 நபர்கள் பங்கெடுத்தார்கள். ரெய்-ஹோ பயிற்சி அனுபவம் இல்லாத இவர்கள், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு குழு வழக்கமான நடைமுறையை பின்பற்று மாறும் இன்னொரு குழுவினர் ஐந்து நிமி டங்களுக்கு ரெய்-ஹோ பயிற்சி செய்யமாறும் அறிவுறுத்தப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு பிறகு ரெய்-ஹோ பயிற்சி செய்தவர்களுக்கு 25.9%, மற்றவர்களுக்கு 2.5 % மட்டுமே முட்டி பலம் அதிகரித்திருப்பது தெரிய வந்தது. சோதனை யில் பங்கெடுத்தவர்கள் முதியவர்கள் அல்ல என்றாலும் அவர்களுக்கும் இந்த பலன் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ‘அண்மைக் காலங்களில் தசை வலிவும் உடல் ஆரோக்கியமும் குறைவது கவலை அளிக்கும் ஒரு முக்கிய பொது உடல்நல விஷயமாக இருக்கி றது. வீட்டிலேயே தங்கும் செடென்ட்டரி வாழ்க்கை முறை இதை இன்னும் அதிகமாக்குகிறது. கை களை விட கால்களில் வலிமை குறைவது அதிகம்’ என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். இந்தப் பயிற்சி ஒருவரது உடல் எடையின் அடிப்படையிலேயே செய்யப்படுவதும் மெது வாகவும் கவனமாகவும் செய்யப்படுவதால் காயங்கள் ஏற்படும் அபாயம் குறைவு; வேறு சில பயிற்சிகளில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது வும் இதில் இல்லை. பாரம்பரிய முறைகளின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணுவது இது முதல் முறை அல்ல. ஜப்பான் நாட்டிற்கு வெளி யில் இருப்பவர்கள் இதை பின்பற்றும்போது உடல் நலம் மட்டுமல்ல, ஜப்பானின் பழமையான பாரம்பரியத்தையும் உணர்வார்கள் என்கிறார் உடற்பயிற்சி நிபுணர் அகிரா சட்டோ. இந்த ஆய்வு Tohoku Journal of Experimental Medicine.எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் தெரிவிக்கிறது.
விண்ணிலும் மண்ணிலும் தாக்குப்பிடிக்கும் நுண்ணுயிரிகள்
சில நுண்ணுயிரிகள் கடினமான சூழலில் வாழக்கூடியவை. இவற்றை எக்ஸ்ட்ரீமோபைல்ஸ் (Extremophiles) என்று அழைக்கிறார்கள். இவை விண்வெளி உயிரியியலாளர்களுக்கு மிகவும் பிடித்த கருவிகளாகும். உயிர்கள் கடினமான சூழலில் எவ்வாறு தாக்குப்பிடிக்கின்றன எனபதை புரிந்து கொள்ள இவை உதவுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரி, வேற்றுச் சூழலில் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் போன்றவற்றை உண்டுபண்ணும் கருவியாகவும் உள்ளது என்று ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது. டார் வேர்கடா எனும் ரோம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியலா பில்லி என்பவரது ஆய்வுக் கட்டுரை இதை தெரிவிக்கிறது. சுரூ (Chroococcidiopsis) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நுண்ணுயிரி பாலைவனத்தை சேர்ந்தது. அதனுடைய வலிய இயல்புகளின் காரணமாக அதனுடைய பல்வேறு அம்சங்கள் குறித்தும் அதன் விளைவாக உயிர்கள் வேற்று கோள்களிலும் விண்வெளியில் தாக்குப் பிடிக்குமா என்பது குறித்தும் பல்வேறு ஆய்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகள் நடந்த இந்த ஆய்வுகளில், திறந்த வெளிகளில் சுரூ எவ்வாறு பிழைக்கின்றன என்று சோதிக்கப்பட்டது. இதன் மூலம் புற ஊதாக்கதிர்களே செல்களை பெரிதும் அழிக்கின்றன; சில அடிப்படையான பாதுகாப்பின் மூலம் செல்களை பாதுகாக்கலாம் என்று காட்டப்பட்டது. விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பிய சுரூ, சேதமடைந்த தனது டிஎன்ஏக்களை சரி செய்து கொண்டது. அதன் எதிர்கால சந்ததிகளிலும் மரபணு பிறழ்வுகள் இல்லை. பூமியில் நடத்தப்பட்ட கதிரியக்கச் சோதனைகளையும் கடும் குளிர் சோதனைகளையும் சுரூ தாக்குபிடித்தது. நிலவு மற்றும் செவ்வாய்க் கோள் நிலப் பரப்பில் அவை ஆக்சிஜனை உண்டுபண்ணுவதும் ஒளிச்சேர்க்கை செய்வதும் காணப்பட்டது. அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு ஒளிச்சேர்க்கை செய்யும் அரிய இயல்பும் இதற்கு இருப்பதால் அத்தகைய கதிர்களை வெளிவிடும் கோள்களில் உயிர்கள் குறித்து புரிந்து கொள்ள உதவும்.
