35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி
மதுரை,டிச.3- 35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி யில் தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. 35 ஆவது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி நவம்பர் மாதம் 27 -30 ஆம் தேதி வரை ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ராயட் பஹ்ரா இன்ஸ்ட்டியூட்டில் நடைபெற்றது. இதில் கேப்டன் காவியா தலைமையில் 14 பேர் கொண்ட தமிழ்நாடு அணி பங்கேற்று விளையாடியது. அணியின் பயிற்சியாளராக கண்ணகி நகர் அணியின் பயிற்சியாளர் ராஜி, மேலாளராக தமிழ் ஆகியோர் வழிநடத்தினர். இதில் லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு அணி 51-13 புள்ளிகளில் மேற்கு வங்கத்தையும் 32-12 புள்ளி களில் உத்தரகண்ட் அணியையும் 38-34 புள்ளிகள் வித்தியாசத்தில் பீகாரையும் வென்றது. காலிறுதி ஆட்டத்தில் 44-31 புள்ளிகளில் இமாச்சலப்பிரதேச அணியையும் அரையிறுதி ஆட்டத்தில் 41-39 புள்ளிகளில் ராஜஸ்தான் அணியையும் வென்றது. இறுதி ஆட்டத்தில் ஹரியானாவுடன் விளையாடி,இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இப்போட்டியில் ஹரியானா அணி தங்கப்பதக்கத்தையும் தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன. ராஜஸ்தான், மகாராஷ்டிரா அணிகள் வெண்கலப்பதக்கங்களை வென்றன.
