tamilnadu

img

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம்!

சென்னை, ஜன. 9 - பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் களை நியமனம் செய்ய ஆளுநருக்கு கூடு தல் அதிகாரம் அளிக்கும் வகையில், வெளி யிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) திருத்த வரைவு விதிகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், வழக்கம்போல பாஜக எம்எல்ஏ-க்கள் மட்டும் எதிர்த்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

மாநில அரசுகளின் உரிமை பறிப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார், ஆளுநர் பரிந்து ரைப்பவரே தேடல் குழுவின் தலைவராகவும், யுஜிசி மற்றும் பல்கலைக்கழக உறுப்பினரால் பரிந்துரைக்கப்படுபவர்களே உறுப்பினர்களாக ஆக முடியும் என யுஜிசி புதிய விதிகளை வெளி யிட்டுள்ளது. இவை மாநில அரசின் அதி காரங்களை பறிப்பதாக அமைந்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஆளுநருக்கு கூடுதல் அதி காரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டிருப்பது அரசியலமைப்பு க்கு எதிரானது எனத் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜன.9) அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.

வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை
நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை 
நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!”
- என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். 

அந்தக் கல்வி நீரோடையை மீண்டும் தடுக்க  எல்லா வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு  வருகிறார்கள்” என்று கூறி, அரசினர் தனித்தீர்மா னத்தை முதலமைச்சர் தாக்கல் செய்தார். “பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என இப்பேரவை கருதுகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் மறு வடிவம்

அதேபோல் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள் - 2024, மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள் - 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை- 2020-இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உயர்கல்வி  முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான  உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு  நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

அனைத்துக் கட்சிகளும்  தீர்மானத்திற்கு ஆதரவு

அதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் தீர்மானத்தை வரவேற்றும் ஆதரவும் தெரிவித்தும் பேசினர்.  தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. முன்னதாக, இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை என்று வழக்கம்போல பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் உயர்கல்வியை சீர்குலைக்க சதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 9 - தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம். சின்னதுரை பேசினார். அப்போது, “பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு விதி முறைகளைத் திரும்பப் பெற வேண்டும்; இந்த விதிமுறைகளால் கல்லூரிகளில் ஆசிரியர் நிய மனம், கல்வி பணியாளர்கள் நியமனம், பதவி  உயர்வு உள்ளிட்ட அனைத்தும் பெரும் பாதிப்புக் களாகும்” என்றார். “அண்டை மாநிலமான கேரளமும் தமிழ்நாடும் கல்வியில் சிறந்து விளங்குகின்றன. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, இந்த இரண்டு மாநிலங்களைக் குறிவைத்து தாக்கி வரு கிறது. அதன் வெளிப்பாடுதான் உயர் கல்வியை சிதைக்க முடிவு செய்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்த சதி திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் கூறினார். “இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்து வத்தின் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கும் ஒன்றிய பாஜக அரசு, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது. மேலும், சமூக நீதி கோட்பாட்டையும் இளைஞர்களின் எதிர்கா லத்தையும் சீரழிக்கிறது” என்றும் குற்றம்சாட்டினார். மேலும், “தமது தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் வரைவு நெறிமுறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நீதி யை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை நீதி மன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் நடத்து வதற்கு திமுக அரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக துணை நிற்கும் என்றும் கூறினார்.