tamilnadu

img

தமிழ்ச் சிறப்புக் கோடு

தமிழ்ச் சிறப்புக் கோடு

வடிவியலில் (Geometry) இதுவரை இரண்டு சிறப்புக் கோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன  சிம்சன் சிறப்புக் கோடு (Simson Line) ஆய்லர் சிறப்புக் கோடு (Euler Line) சிறப்புக்கோடு என்பது மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட முக்கியப் புள்ளிகளைப் ஒரு நேர்கோடு இணைத்தால், அக்கோடு சிறப்புக் கோடு என்று அழைக்கப்படும். மேலே உள்ள இரண்டு சிறப்புக் கோடுகளும் அப்படியானவையே.  இப்பொழுது மூன்றாவதாக ஒரு சிறப்புக் கோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்தவர் மதுரையைச் சேர்ந்த இராசா கிளைமாக்சு என்ற வடிவியல் வல்லுநர். இச்சிறப்புக் கோடு நான்கு முக்கியப் புள்ளிகள் வழியாகச் செல்கின்றது என்பதைக் கண்டுபிடித்து அக்கோட்டுக்குத் “தமிழ்ச் சிறப்புக் கோடு” என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தமிழ்ச் சிறப்புக் கோடு பற்றியும், அது இணைக்கும் நான்கு முக்கியப் புள்ளிகள் பற்றியும் கீழே காண்போம். ஒற்றைப்புள்ளி (Concurrent) சிவியன் கோடுகள்: ஒரு முக்கோணத்திற்கு மூன்று முனைகள் (vertices) உண்டு. அவற்றுள் ஏதாவது ஒரு முனையிலிருந்து அதன் எதிர்ப் பக்கத்திற்கு வரையப்படும் நேர்கோடு “சிவியன்” என்று அழைக்கப்படும். இவ்வாறு அதன் மூன்று முனைகளிலுமிருந்து வரையப்படும் சிவியன் கோடுகள் ஒற்றைப் புள்ளி வழியாகச் சென்றால் அந்த சிவியன்கள் “ஒற்றைப்புள்ளி (Concurrent) சிவியன்கள்” என்று அழைக்கப்படும்.  படம்-1 இல், ABC இல், AD, BE & CF ஆகிய சிவியன்கள் C1 என்ற ஒற்றைப்புள்ளியில் சந்திக்கின்றன. எனவே இங்கு C1 என்பது ஒரு முக்கியப் புள்ளி. இங்கு AD, BE & CF என்பன ஒற்றைப் புள்ளி சிவியன்கள். இப்போது அடுத்த முக்கியப் புள்ளியைப் பார்க்கலாம்.  படம்-2 இல், படம் -2 படம் -1 இல் கண்ட D, E & F புள்ளிகள் வழியாக ஒரு வட்டம் வரையப்படுகிறது. அந்த வட்டம் BC, AC & AB பக்கங்களை L, M & N என்ற புள்ளிகளில் வெட்டிச் செல்வதைக் காணலாம். இப்போது, AL, BM & CN ஆகிய சிவியன்களை வரைந்தால் அம்மூன்று சிவியன்களும் C2 என்ற ஒற்றைப் புள்ளி வழியாகச் செல்வதைக் கண்டு வியக்கலாம். அதனைப் படம்--3 இல் காண்க.  இந்த C2 என்ற புள்ளியும் ஒரு முக்கியப் புள்ளி. எனவே இந்த C2 என்பதை இரண்டாவது முக்கியப் புள்ளி என்று கொள்ளலாம். AL, BM & CN ஆகிய சிவியன்கள் ஒற்றைப்புள்ளி வழியாகச் செல்கின்றன என்பதும் இதுவரை அறியப்படாத ஒரு புதிய கண்டுபிடிப்பே. இனி மூன்றாவது முக்கியப் புள்ளியைப் பார்க்கலாம்.  படம்-4 இல், AD, BE & CF ஆகிய சிவியன்கள், வட்டத்தை P,Q & R ஆகிய புள்ளிகளிலும், AL, BM & CN ஆகிய சிவியன்கள் வட்டத்தை X, Y & Z ஆகிய புள்ளிகளிலும் வெட்டிச் செல்வதைக் காண்க. இங்குள்ள படங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியானவை என்பதையும் புரிக. படம்-4 இல், சிவியன்கள் அதிகமாக இருப்பதால் குழப்பம் ஏற்படலாம். எனவே சிவியன்களை எடுத்துவிட்டு புள்ளிகளை மட்டும் வைத்து படம்-5 வரையப்பட்டுள்ளது. படம்-5 இல், உள்ள PL, QM & RN ஆகிய கோடுகளை இணைத்தால், அவையும் ஒற்றைப் புள்ளி வழிக்கோடுகளாக அமைவதைக் கண்டு வியக்கலாம்(C3). பார்க்க படம்-6. அவ்வாறே XD, YE & ZF ஆகியவற்றை இணைக்கும் பொழுதும், அவையும் ஒற்றைப்புள்ளி வழிக்கோடுகளாக அமைவதைக் காணலாம் (C4). பார்க்க படம்-6.  படம் -6  எனவே, இங்கு C1, C2, C3 & C4 என்பன நான்கு முக்கியப் புள்ளிகளாகக் கருதபடுகின்றன. இதில் வியப்பிலும் வியப்பு என்னவென்றால், இந்த நான்கு புள்ளிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன என்பதுதான். பார்க்க படம்-7. இது ஒரு புதிய சிறப்புக்கோடு. எனவே இராசா கிளைமாக்சு தமது மொழிப்பற்றின் காரணமாக, இச்சிறப்புக் கோட்டிற்கு “தமிழ்ச் சிறப்புக் கோடு” (Tamil Line) என்ற பெயரைச் சூட்டியுள்ளார். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் “தமிழ்ச் சிறப்புக் கோடு” பற்றிய வடிவியல் தேற்றத்தை சனவரி 2026 இல் திருச்சியில் நடைபெற்ற சர்வதேசக் கணித மாநாட்டில் இராசா கிளைமாக்சு விரித்துரைத்து, அம்மாநாட்டில் கூடியிருந்த கணித அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.