tamilnadu

img

சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு...விண்ணில் இருந்து மண்ணுக்கு

சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு...விண்ணில் இருந்து மண்ணுக்கு 

ர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் புதனன்று அதிகாலை பூமிக்குத் திரும்புகிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, செவ்வாயன்று காலை 8:15 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்திற்குள் சென்றனர். அதைத் தொடர்ந்து, காலை 10:35 மணிக்கு, டிராகன் விண்கலம் சர்வதேச  விண்வெளி நிலையத்தை விட்டு பிரிந்தது (Undocking). பூமியை நோக்கிப் பயணத்தைத் துவங்கியது. நேரடி ஒளிபரப்பு இந்நிலையில், இந்த விண்கலம் 17 மணி  நேர பயணம் செய்து இந்திய நேரப்படி புதன்கிழமை (மார்ச் 19) அதிகாலை 3:27 மணிக்கு பூமியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.  முன்னதாக, அதிகாலை 2:15 மணியளவில் இருந்தே விண்கலம் பூமிக்கு திரும்பும் பயணத்தை நாசா நேரடியாக ஒலிபரப்பு செய்கிறது. அதாவது, அதிகாலை 2:41 மணிக்கு விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் (நேரம் தோராயமானது). அதிகாலை 3:27 மணி - விண்கலத்தின் வேகம் குறைந்து, பாராசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் இறங்கும் (நேரம் தோராயமானது). காலை 05:00 மணி - பூமிக்கு அவர்கள் திரும்பிய பிறகு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள். வெப்பப் பாதுகாப்பு : முன்னதாக, விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எதிர்கொள்ளும். இந்த அதீத வெப்பத்தில் இருந்து வெப்பப் பாதுகாப்புக் கவசங்கள் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கும். ஈர்ப்பு விசை : விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும், விண்வெளி வீரர்கள் புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையை எதிர்கொள்வார்கள். பாராசூட் : இறுதிக்கட்டத்தில் 4 பெரிய பாராசூட்கள் விரியும், இது விண்கலத்தின்  வேகத்தைக் குறைத்து, பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்க வழிவகுக்கும். புதிய குழு : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச்  சென்றுள்ளனர். இந்த புதிய குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளைத் தொடரும். 286 நாட்களாக நீண்ட 8 நாள் : வெறும் 8 நாள் பயணமாக கடந்த 2024 ஜூன் 5-ஆம் தேதி விண்வெளி நிலையத்திற்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலனில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் அங்கேயே தங்க நேரிட்டது. அவர்கள் பூமிக்குத் திரும்புவது சிக்கலாக மாறியது. இந்நிலையில்,  அவர்களை மீட்க 9 மாதங்களுக்கு பிறகு, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 டிராகன் ராக்கெட் ஏவப்பட்டு, அது தற்போது சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்டு, பூமியை நோக்கித் திரும்பியுள்ளது.