அடிமனை பயனாளிகள்-குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஏப்.17-இல் மாநிலம் தழுவிய போராட்டம்
நிலத்தை விட்டு வெளியேற்ற இந்துசமய அறநிலையத் துறை முயற்சி
மயிலாடுதுறை, ஏப்.8- தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 17 அன்று சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை காமராஜர் சாலையிலுள்ள கோ.பாரதிமோகன் நினைவகத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களின் பெயரில் இருக்கிற 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் இடங்களை அடிமனைகளாகவும், குடிமனைகளாகவும், சிறு, குறு கடைகள் வைத்திருப்பவர்கள், குத்தகை விவசாயிகள் என மூன்று, நான்கு வகைகளாக, தமிழ்நாட்டில் உள்ள இந்து மதத்தை பின்பற்றுகிற 98 சதவீத ஏழை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் அந்த இடங்கள், நிலங்களுக்கான ஒரு பகுதியை செலுத்தி வந்துள்ளனர். இதையெல்லாம் வைத்துதான் கோவில்களில் நடைபெறும் கால பூஜைகள், திருவிழாக்கள், குடமுழுக்கு போன்றவைகள் இடைவிடாது நடைபெற்று வந்தன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த நடைமுறை மாற்றப்பட்டு, கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வாடகை என நிர்ணயித்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ‘நியாய வாடகை’ என்ற பெயரில் அநியாய வாடகை நிர்ணயித்தனர். அதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கோயில் இடங்களில் குடியிருப்போரின், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றும், அரசாணை 318-ஐ செயல்படுத்துவதற்கான சீராய்வு மனுத் தாக்கல் செய்வோம் என கூறியது. ஆனால் இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மடம், அறக்கட்டளைகள் மற்றும் வக்ஃபோர்ட், தேவாலயங்கள் இடங்களில், அடிமனையில் குடியிருப்பவர்கள், சிறுகடை வைத்திருப்போர், விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக உள்ளவர்களை வெளியேற்றுவதற்காக பல உத்தரவுகளை போட்டு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவில் சொத்துகளை இதுவரை பாதுகாத்து வரும் ஏழை, எளிய மக்கள் தாங்கள் அனுபவித்து வரும் இடங்களுக்கு கடந்த காலத்தில் “பகுதி பணமாக” செலுத்தி வந்ததை வாடகையாக மாற்றி, அதை மூன்றாண்டுக்கு ஒருமுறை நிலத்தின் சந்தை மதிப்பின்படி சதுரடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்யும் மோசமான நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வந்த விவசாயிகளை அவர்களின் குத்தகை உரிமையை பறித்து, புதிதாக ஏலம் விடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ்நாடு முழுவதும் இனாம் நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நில உரிமையை பறித்து இனாம் நிலங்களையும் கோயில் நிலங்களாக மாற்றும் நடவடிக்கையை அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் அறமற்ற நடவடிக்கைகளை கண்டித்து, ஏப்ரல் 17 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெறும் அந்நாளில் சென்னை, மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையும் தீர்மானித்தும் கிரய பட்டா வழங்கிட வேண்டும். கிரயப் பட்டா கோரிக்கை நிறைவேறும் வரை பயனாளிகளுக்கு வாடகையை சட்டப்பிரிவு 34-ஏ-ன்படி வாடகை நிர்ணயிப்பதை கைவிட்டு, மக்களின் வாழ்நிலைக்கேற்ப குறைந்தபட்ச வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து “மறு ஏலம்” என்ற பெயரில் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட்டு பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆர்டிஆர் பதிவு செய்து (Record of tenant Rights), 2019 இல் வெளியிடப்பட்ட அரசாணை 318-ஐ செயல்படுத்திட சட்டமன்றத்தில் அறிவித்தப்படி, சீராய்வு மனுவை மாநில அரசு உடனே தாக்கல் செய்ய வேண்டும். கோவில் பெயரில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாத, இனாம் நிலங்கள், பலவகை புறம்போக்கு இடங்களை யூடிஆர்-ல் தவறுதலாக பெயர் மாற்றம் ஆகியுள்ள சொத்துக்களின் மீது அறநிலையத் துறை உரிமை கோருவதை கைவிட வேண்டும். பயனாளிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி மின் இணைப்பு மற்றும் வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். அறநிலையச் சட்டப்பிரிவுகள் 72பி, 78, 78/ஏ, 79சி ஆகிய பிரிவுகளின் கீழ் பயனாளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். வக்ஃபோர்டு இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்களுக்கும் பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு சாமி.நடராஜன் கூறினார். இச்சந்திப்பின் போது, சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் த.ராயர், சி. மேகநாதன், அ.ராமலிங்கம், பி.குணசுந்தரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.