வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல்&டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில், ரெட்டிட் தளத்தில் எல் & டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம், "வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும்; ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்தால் மகிழ்ச்சி; வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவியை வெறித்துப் பார்க்க முடியும்? மனைவிகள் தங்கள் கணவர்களை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்க்க முடியும்? வாருங்கள், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இவரது இந்த பேச்சிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.
தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.
அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?
சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான்.
தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?
இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.
நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.