சென்னை பாலிடெக்னிக் கல்லூரி மாணவியின் வழக்கில் உரிய விசாரணை நடத்திட வேண்டும்கும்பகோணத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
உண்மைத் தன்மையுடனும், உரிய சட்டங்களுக்கேற்ப விசாரணை நடத்திடவும் தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் சார்பில் வலியுறுத்தி கும்பகோணத்தில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மாணவியின் வழக்கில், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சிறார்களுக்கென இயற்றப்பட்டிருக்கும் பாதுகாப்பு சட்டங்களான ‘நிர்பயா சட்டம்’ எனப்படும் குற்றவியல் திருத்தச் சட்டம் 2013, ‘போக்ஸோ சட்டம், 2012’ மற்றும் சிறார் நீதிச் சட்டம் வரையறுத்திருக்கும் விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை. ஆகவே, சட்டத்தின்படி காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சரவணன் தலைமை போராட்டத்தை விளக்கிப் பேசினார். பரசுராமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபிநாத் கிளைச் செயலாளர் மகேஷ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திவ்யா நன்றி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 34,479 மாணவர்கள்
தமிழகம் முழுவதும் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வினை 17,523 மாணவர்கள், 16,956 மாணவிகள் என மொத்தம் 34,479 பேர் எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக திருச்சி கல்வி மாவட்டத்தில் 99 மையங்கள், லால்குடி கல்வி மாவட்டத்தில் 73 மையங்கள், சிறைச் சாலை மையம் 1 என மொத்தம் 173 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக 231 பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர் 2,653 ஆசிரியர்களும், 348 அலுவலக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வினை தனித்தேர்வர்கள் எழுதுவதற்காக, திருச்சி வருவாய் மாவட்டத்தில் 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 40 சிறைத்தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். திருச்சி கல்வி மாவட்டத்தில் 2 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 7 வினாத்தாள் மையங்களும் என மொத்தம் 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 37 வழித்தட அதிகாரிகள் ஆயுதம் தாங்கிய போலீசாருடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்ளுக்கு திருச்சியில் 12 நாள் நீச்சல் பயிற்சி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மற்றும் நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு தகுதிவாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், ஜுன் மாதம் 8 ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் காலை 9.30 மணிவரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சிக்கான கட்டணம் ரூ.1500 + ஜி.எஸ்.டி18 சதவிகிதம் (ஒரு நபருக்கு, ஒரு மணி நேரம் 12 நாட்கள் வகுப்பு) 8 வயதிற்கு மேற்பட்டவர்கள் நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள், ஆண்கள் மற்றும் மாணவியர்கள், பெண்கள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்க நீச்சல்குளத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.