பெண்களை கண்ணியமற்றுப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 27 - பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களைக் கூறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பெண்களைப் பண்டமாகக் கருதும் ஆணாதிக்க பார்வை! பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கக் கூடிய விதத்திலும் பிற்போக்கு ஆணாதிக்கக் கருத்துக்களை முன்வைப்பது, குறிப்பாக, பொதுவெளியை, இணையத்தை அதற்காகப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது. அதுவும் தேர்தல் நடக்கவுள்ள பின்னணி யில், அரசியல் கட்சிகளை விமர்சிப்பது என்கிற பெயரில், பெண் தலைவர்களை, உறுப்பினர்களை, ஆதரவாளர்களை இழிவு படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபெண்களைப் பாலியல் பண்டமாகக் கருதும் அப்பட்டமான ஆணாதிக்கக் கண்ணோட்டம் மற்றும் கண்ணியக் கொலை என்பதோடு, பெண்களை அச்சுறுத்தி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாகும். மேலும் அரசியல் என்கிற மிக முக்கியமான தளத்தின் தரத்தை சிதைக்கும் நடவடிக்கையாகும். கொள்கை அடிப்படையில் விமர்சிக்க இயலாமை! பாலின சமத்துவம், அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சமாகும். தேர்தல் நடத்தை விதிகள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கண்ணியமற்றுப் பேசுவதை அனுமதிக்கவில்லை. எனவே, இத்தகைய பேச்சுகள், தேர்தல் நடத்தை விதிகளை பகிரங்கமாக மீறுவதாகும். இது பிஎன்எஸ் சட்டப் பிரிவு 79-இன் அடிப்படையில் கிரிமினல் குற்றமாகும். கொள்கையின் அடிப்படையில் விமர்சிக்கும் தகுதியின்மையும், இயலாமையும், போதாமையுமே இதில் வெளிப்படுகிறது. பேசுவதையெல்லாம் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் முடிந்து விடக்கூடிய விஷயமல்ல இது. கட்சித் தலைமை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! எனவே, பெண்கள் குறித்த கண்ணிய மற்ற இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கட்சி வித்தியாசம் இல்லாமல் இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென வும், கட்சித் தலைவர்கள் பேசினால் அரசியல் கட்சிகளின் தலைமை சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.