நாளை சிறப்பு கிராம சபைக்கூட்டம் பெரம்பலூர் ஆட்சியர் தகவல்
உலக தண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டம் தமிழ்நாடு அரசின் நிர்வாக காரணங்களால் 29.03.2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 29.03.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராமங்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்களின் தகவல்களை வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராம சபைக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப்பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் இறுதி செய்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் இறுதி செய்தல், இதர பொருட்கள் ஆகிய கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, அன்றைய தினம் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில், கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்து விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு!
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள நியூகாலனி துணை அஞ்சலகத்தில் ஆதார் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலுமாக பொது நலன் கருதியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பள்ளிக்குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்வோரின் ஆதார் தொடர்பான சிரமத்தைப் போக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, புகைப்படம், கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.1௦௦ ஆகும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லையில் இ.பி.எப். பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச பென்சன், பஞ்சப்படி இணைத்து ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான பறிக்கப்பட்ட ரயில்வே கட்டணச் சலுகையை வழங்க வேண்டும். மாதம் ரூ 2 ஆயிரம் சமூக பாதுகாப்பு நிதி மூலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலியில் இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருநெல்வேலி இபிஎப் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வேலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் எஸ்.சொக்கலிங்கம், வி.கே.புரம் செயலாளர் சங்கரன் மணி ,தலைவர் பி. சுடலையாண்டி, சிஐடியு தலைவர் ராம் சேகர் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் பி.எப். அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது 300க்கும் மேற்பட்ட பென்சனர்கள் பங்கேற்றனர்.
விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம் விதிப்பு'
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணிக்கு பிறகு இயக்கப்பட வேண்டிய வெற்று லாரிகள் 9 மணிக்கு முன்பாகவே தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படுவது தெரியவந்தது. அப்போது, தக்கலை போக்குவரத்து காவல் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது 9 வெற்று லாரிகள் உத்தரவை மீறி இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனங்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, தினமும் இரவு 9 மணிக்கு மேல் வெற்று லாரிகளை இயக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பப்பட்டது.