ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பான தனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொருத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராகேஷ் கக்காணி எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்விதத் துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு தடையாக இருந்த முக்கியமான பிரச்சனை இச்சுற்றறிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது ஆதரவற்ற பெண்கள் எண்ணற்றோருக்குப் பெரும் பலன் தரக்கூடிய ஒன்று. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.