நிதிப் பாரபட்சத்தையும் எதிர்கொண்டு சமூக நலத்திட்டங்கள் அறிவிப்பு!
தமிழக அரசின் பட்ஜெட் விவாதத்தில் எம். சின்னத்துரை எம்எல்ஏ பேச்சு
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை, சட்டமன்றத்தில் பாராட்டியதோடு, மாநில உரிமை களை பறிக்கும் ஒன்றிய அரசின் தாக்குதல்களுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை தெரிவித்தார். அரசு ஊழியர்கள், தொழிலா ளர்கள், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் ஆகி யோரின் நலன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கைகள் மீதான இரண்டாம் நாள் பொது விவாதத்தில் பங்கேற்று எம். சின்னதுரை எம்எல்ஏ பேசி னார்.
ஒன்றிய அரசின் அரசியலமைப்பு விரோத செயல்பாடுகள்
“ஒன்றிய பாஜக அரசு, அரசியல் சாசனத்தை காலில் போட்டு மிதிப்பது, மாநில உரிமைகள், சுயாட்சி கோட்பாடுகள் ஆகிய வற்றை பறிப்பது, அனைத்து அதி காரங்களும் நமக்குத் தான் இருக்கிறது என்ற ஆணவப் போக்கில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது,” என்று தோழர் சின்ன துரை தனது உரையை தொடங்கி னார். “தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு, பேரிடர் நிதி ஒதுக்கீடு, ஜி.எஸ்.டி. வரிப் பங்கீடு, மானி யங்கள் வழங்குவது ஆகிய வற்றில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்ற முடிய வில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
கல்வி நிதி மறுப்பு - மாநில உரிமை பறிப்பு
“சமக்ரா சிக்ஷ அபியான் திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ. 2,152 கோடியை தராமல் வேறு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்தது வரலாற்றில் இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த எந்த ஒன்றிய அரசும் செய்யாத அநீதியாகும்” என்று குற்றம் சாட்டினார். “இதுகுறித்து நாடாளுமன்றத் தில் தமிழக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பிய போது தமிழ்நாட்டு மக்க ளை அவமதிக்கும் வகையில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ஆணவமாக பேசியது வன்மை யான கண்டனத்துக்கு உரியதாகும், ” என்று சின்னதுரை விமர்சித்தார்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி நிலுவை
“தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர் களுக்கு ஒன்றிய பாஜக அரசு 3,796 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கா மல் நிலுவையில் வைத்திருக்கிறது. இதனால், தைப் பொங்கல் திருநா ளைக் கூட விவசாயக் கூலித் தொழி லாளர்கள் பலரும் கொண்டாட முடி யாமல் போனது” என்று ஒன்றிய அரசின் வஞ்சனையை அம்பலப் படுத்தினார். “இயற்கைப் பேரிடர் காலங் களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்காமல், தமிழகத்தை மட்டுமல்லாது; கேரளம் உள்ளிட்ட பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள்ஆளும் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து அந்த மாநில அரசுகள் மீது அரசியல் உள்நோக்கத்துடன் பெரும் தாக்கு தலை தொடுத்து வருகிறது,” என்றார்.
நவ பாசிச ஒற்றை ஆட்சி முயற்சிக்கு கண்டனம்
“மும்மொழிக் கொள்கை மூலம் வலுக் கட்டாயமாக இந்தி - சமஸ்கிருதத்தை திணிப்பது, ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’, ‘ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என ஒற்றை ஆட்சி முறையை ஏற்படுத்தத் துடிப்பது, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயல்வது போன்ற நவ பாசிச அடிப்படையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருப் பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று உறுதியான குரலில் தெரிவித்தார்.
தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு வரவேற்பு “
ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்காத நிலையிலும் கூட தமிழக அரசு இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கெனவே அமலாக்கப் படும் சமூக நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனை களும், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப் பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது,” என்று தோழர் சின்னதுரை குறிப்பிட்டார். “மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரி வாக்கம், காலை நேர உணவுத் திட்டத்தை, நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவது, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, மாநகராட்சி களில் 30 இடங்களில் முதல்வர் படிப்பகம், நடப்பு நிதியாண்டில் 5 லட்சம் மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கள் வரவேற்கத்தக்கவை,” என்று சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார்.
வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகளுக்கு பாராட்டு
“வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ரூ. 45 ஆயிரத்து 661 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் மிகவும் சிறப்பானது, 1000 இடங்களில் ‘முதல்வர் உழவர் நல சேவை மையம்’ அமைப்பதாகும்,” என்று சின்ன துரை பாராட்டினார். “நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்கு சிறப்பு தொகுப்பு, சிறு - குறு விவசாயிகள் இயந்திரங்கள் வாங்குவதற்கான மானியம் உயர்வு, இயற்கை விவசாயத்தை ஊக்கு வித்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங் கள், முந்திரி சாகுபடிக்கு முந்திரி வாரியம் அமைப்பது, பனை சாகுபடியை அதிகரிக்க திட்டங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், தூர்வாரும் பணிக்கு கூடுதல் ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கத்தக்கது ஆகும்,” என்று விவசாயத்திற்கான நடவடிக் கைகளை பாராட்டினார்.
அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நலன்கள் “
அரசு ஊழியர் - ஆசிரியர்களின் ‘சரண்டர் விடுப்பு பணப்பலன்’ வரவேற்கத்தக்க அறி விப்பாகும்; அதை இந்த ஆண்டே நடை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்து கிறோம்,” என்று குறிப்பிட்ட சின்னதுரை, “12 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நாற்பதாயிரம் பணி யிடங்கள் மட்டும் நிரப்பப்படும் எனும் அறி விப்பை மேம்படுத்த வேண்டும்,” என்றார். “தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி என்பது தொழிலாளர் நலன்களோடும், தொழிற்சங்க சட்டங்களோடும் அமைந்திட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் நலன், தொழிற்சங்க உரிமை, கூட்டுப்பேர உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
சமூக நீதி மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு
“பெண்கள் - குழந்தைகள் மீதான பாலி யல் வன்முறைகளை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பள்ளிக்கூடங் கள், கல்வி நிலையங்களில் பாலியல் வன் முறைகள் நடக்காத வண்ணம் தடுப்பதற்கு கறாரான நடவடிக்கைகளையும், விழிப்பு ணர்வுகளையும் ஏற்படுத்திட வேண்டும்,” என்று வலியுறுத்திய சின்னதுரை, “சாதி பகைமைகள், தீண்டாமைக் கொடுமைகளை அறவே ஒழித்துக் கட்ட வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளை முடிவு கட்டு வதற்கு இதற்கென்று தனிச் சட்டம் இயற்றிட வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
தொகுதி சார்ந்த கோரிக்கைகள்
கந்தர்வக்கோட்டை தொகுதியின் பல்வேறு தேவைகளுக்காகவும் சின்னதுரை குரல் கொடுத்தார். “கந்தர்வகோட்டை தொகுதியில் உள்ள கறம்பக்குடி, கந்தர்வக் கோட்டை ஒன்றியங்கள் முழுமையாகவும் புதுகை ஒன்றியத்தில் ஆதனக்கோட்டை பிர்கா பகுதியையும் இணைத்து கந்தர்வக் கோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்து தர தொடர்ந்து நான்கு ஆண்டு களாக கோரிக்கை வைத்து வருகிறேன்,” என்றார். “கீரனூர் பகுதியில் 50 கிலோ மீட்டர் சுற்ற ளவில் அரசு கல்லூரி என்பதே கிடையாது. எனவே, அரசுக் கல்லூரி அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்ற கோரிக்கையையும் வைத்தார். “குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் தொழிற்பூங்கா (சிப்காட்) அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட முதல மைச்சர், நிதி அமைச்சர், சட்டத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பில் தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்,” என்று எம். சின்னத் துரை தனது உரையை நிறைவு செய்தார்.