1904ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் நாள் உத்தரப் பிரதேசம் ஹர்தாய் மாவட்டத்தில் பிறந்தவர் தோழர் சிவவர்மா. இவர் தமது17ஆம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டார். இவர் பகத்சிங் உருவாக்கிய இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர். இவர் 1929ஆம் ஆண்டு சஹரண்பூர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். 1929-30இல் நடைபெற்ற இரண்டாவது லாகூர் சதி வழக்கில் எதிரியாகச் சேர்க்கப்பட்டார். இவ்வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும் ஆறு பேருக்குக் கடும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் சிவவர்மா நாடு கடத்தும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு அந்தமான் செல்லுலார் சிறையில் பல்லாண்டுகள் வைக்கப்பட்டார். அங்கு அவர் கம்யூனிஸ்ட் ஆனார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரப்பிரதேச செயலாளராக இருந்தார். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். பல ஆண்டுக்காலம் கட்சியின் இந்தி இதழான நயா சவேரா, 1953இல் பம்பாயிலிருந்து வெளிவந்த நயாபாத்(புதிய பாதை) இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தார். இவரது ‘மார்க்சியத்தை அறிந்து கொள்வோம்’ என்ற நூல் லட்சக்கணக்கில் பிரசுரம் செய்யப்பட்டது. பகத்சிங்கும் அவரது தோழர்களும் எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இறுதிக்காலத்தில் கண் பார்வையை இழந்த சூழ்நிலையில் கடுமையாக உடல் நலிவடைந்திருந்த போதிலும் இவர் இறக்கும் வரை உழைக்கும் மக்களின் முன்னணிப் போராளியாக விளங்கினார். - பெரணமல்லூர் சேகரன்