tamilnadu

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

கிறிஸ்துமஸ் 


கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பார்வை மாற்றுத் திறனாளி ஒருவர் பாஜகவின் மாவட்ட நிர்வாகியால் தாக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. தேவாலயத்தில் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கையில், குழந்தைகளை மத மாற்றம் செய்கிறார்கள் என்று கூறியவாறு, அந்த மாவட்ட நிர்வாகி அஞ்சு பார்கவா உள்ளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பார்வை மாற்றுத் திறனாளியைத் தாக்கியதோடு, ஆளுங்கட்சிக்காரர் என்பதால் அந்த மாற்றுத் திறனாளி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.  
புத்தாண்டு 


ஆரவல்லி மலைத்தொடர் பிரச்சனையில் ராஜஸ்தானில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆளும் பாஜக காங்கிரசை நோக்கி கை நீட்டுகிறது. காங்கிரசோ பாஜகவைக் குற்றம் சாட்டுகிறது. 100 மீட்டர் உயரத்துக்குக் குறைவாக உள்ள பகுதிகளில் சுரங்கம் தோண்ட அனுமதிக்கப் போவதுதான் பிரச்சனை. இதை முன்பு ஏற்றுக் கொள்ளாத உச்சநீதிமன்றம் தற்போது தலையாட்டி இருக்கிறது. ஆரவல்லி மலைத்தொடரில் 90 விழுக்காட்டிற்கும் மேல் 100 மீட்டர் உயரத்துக்குக் குறைவானதுதான். ஒட்டுமொத்த மலைத்தொடரையே காலி செய்வதுதான் இதன் நோக்கம் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு. இடதுசாரிக் கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்டவை மக்களோடு களத்தில் நிற்கின்றன. இது தில்லி, அரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிற்காலத்தில் பாதிப்பதாக அமையும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.


சங்கராந்தி 


தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடப்படும் வேளையில், நாட்டின் பல மாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் பல முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கவும் இந்த நாளை அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள். மும்பையில்  காங்கிரசின் முகமாக இருந்த மிலிந்த் தியோரா, கட்சி மாறும் முடிவை  இந்த நாளில்தான் எடுத்தார். முதல்வராக இருந்து, தற்போது துணை  முதல்வராக இருக்கும் சிவசேனாக் கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி நாளில்தான் மக்களை விரிவான அளவில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கமான உற்சாகம் வரும் சங்கராந்தி அன்று அவருக்கும், அவரது கட்சியினருக்கும் இருக்காது என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. மும்பை மாநகராட்சி தேர்தல் உடன்பாட்டில் தங்களை பாஜக மோசமாக நடத்தியிருப்பதாகக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

குடியரசு தினம் 

நான் எப்படி பயமில்லாமல் வாழ முடியும் என்று உத்தரப்பிரதேசம், உன்னாவ் நகரில் நடந்த பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட வர் கதறியிருக்கிறார். அக்கொடுமையைச் செய்த பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தில்லி உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் குற்றவாளி வெளியில் வரவிருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தங்கள் உயிர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று குமுறியுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, தங்களுக்கு சட்ட ரீதியான உதவி செய்யுமாறு கோரியிருக்கிறார்கள். நாம் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடப் போகும் நிலையில், தண்டனை யை நிறுத்தி வைப்பது, மக்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்யுமே என்று அந்தக்குடும்பத்திற்கு ஆதரவு தரும் யோகிதா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.