வெம்பக்கோட்டை, பிப்.16- வெம்பக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திடவும் காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அ.குருசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், டி.கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது எல்.மேட்டூர் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கே.முத்து என்பவரது மகள் கமலி (24). தையல் தொழிலாளியான இவரும், ஏ.லெட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜான்ஜெரால்டு என்பவரது மகன் ஜான்கில்பர்ட் பிரேம்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் விருப்பத் திருமணம் செய்துள்ளனர்.
யாஷிகா (4) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்த ஜான் கில்பர்ட் பிரேம்ராஜ், வேலைக்குச் செல்லாமல் மது குடித்து விட்டு அடிக்கடி கமலியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கமலியின் மாமியார் பவுன் தன்னை சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும், தான் சமைத்தால் சாப்பிட மறுப்பதாகவும் கமலி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும், கமலி கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த வாரம் தென்காசி மாவட்டம், இலத்தூர் அருகேயுள்ள குளத்துப் பகுதியில் உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கமலியின் கணவர் ஜான்கில்பர்ட் பிரேம்ராஜ் மற்றும் அவரது உறவினர் தங்கதிருப்பதி ஆகியோரைக் கைது செய்துள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கமலியின் படுகொலை சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இப்படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் ஜான்கில்பர்ட் பிரேம்ராஜ், தங்கதிருப்பதி மற்றும் மாமியார் பவுன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பிரிவுடன் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள கமலியின் பெற்றோருக்கு தமிழக அரசு தீருதவி வழங்கிட வேண்டும். அவரது பெண் குழந்தைக்கு உரிய பாதுகாப்பினையும் உறுதி செய்திட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.