தூய்மைப் பணியாளர்களின் 150 நாள் போராட்டம் வெற்றி சென்னை, ஜன. 12 – சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 150 நாட்களுக்கும் மேலாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அம்பத்தூரில் போராடி வந்த 5 மற்றும் 6-வது மண்டலப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். “இந்த மாத இறுதிக்குள் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சியின் கீழ் அதிகாரப்பூர்வமாகப் பணியமர்த்தப்படுவார்கள். இந்தப் பொங்கல் அவர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக அமையும்” என அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
விஜய்-யிடம் 5 மணி நேரம் விசாரணை!
புதுதில்லி, ஜன. 12 - கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யிடம் ஜனவரி 12 அன்று காலை 11:30 மணி முதல் மாலை சுமார் 5 மணி வரை 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும் 2 மணி நேரம் அலுவலகத்தில் விஜய் காத்திருந்தார். விசாரணைக்குப் பின், அங்கிருந்து புறப்பட்டு சொகுசு நட்சத்திர ஹோட்டலுக்கு விஜய் சென்றார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும் (ஜன. 13) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ் கட்டண புகார் உதவி எண்கள்
சென்னை, ஜன.12- பொங்கல் தொடர் விடு முறையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை போக்கு வரத்து மற்றும் சாலைப் பாது காப்பு ஆணையரகம் அறிவித்துள்ளது. ஜனவரி 12 முதல் 18 வரை யிலான பயணங்களில் அனு மதிக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களுக்கு எதிராக சிறப்புக் குழுக்கள் அமைக்கப் பட்டு சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம். மாநில அளவிலான தொடர்பு எண் 1800 425 6151. சென்னை வடக்கு 99442 53404, சென்னை தெற்கு 97905 50052 உள்ளிட்ட பிராந்திய அலுவலக எண்களும் வெளியிடப் பட்டுள்ளன.