பொருளியல் அரங்கம்
ஓட்டம்னா ஓட்டம், உங்க ஓட்டம் எங்க ஓட்டம் இல்லீங்க...
அந்நிய நிறுவன முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதில் 2025 ஐ “சாதனை” ஆண்டாக மாற்றி உள்ளன. ஓட்டம்னா ஓட்டம், உங்க ஓட்டம் எங்க ஓட்டம் இல்லீங்கற மாதிரி ஒவ்வொரு வர்த்தக மணி நேரத்திலும் (Trading Hour) 110 கோடி ரூபாய் பெறுமான அந்நிய முதலீடுகள் வெளியேறி உள்ளன. அந்நிய முதலீடுகளில் மூன்று வகை உண்டு. முதல்வகை, தொழிலுக்கு புதிய முதலீடாக வருவது இதை பசும் வயல் முதலீடுகள் (Green Field Investment) என்பார்கள். இரண்டாவது வகை, புதிய முதலீடாக அல்லாது ஏற்கெனவே இருக்கிற தொழிலை அப்படியே வாங்கவோ, கைப்பற்றவோ வரும். அது பழுப்பு நிற முதலீடுகள் (Brown Field Investments). மூன்றாவது வகை, தொழிலில் முதலீடாக அல்லாமல் உள்ளே வந்து ஊக வணிகத்தில் ஈடுபடும். அவர்களே அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) என்று அழைக்கப்படுவார்கள். அந்நிய முதலீடுகள் தொழிலில் “பசும் வயல் முதலீடுகளாக” அமைந்து வேலை வாய்ப்புகளை, உள் நாட்டில் இல்லாத தொழில் நுட்பத்தை கொண்டு வருவதாக அமைந்தால் வரவேற்கலாம். தொழிலைக் கைப்பற்ற இணைப்பு & கையகப்படுத்தல் (M&A) என்பதற்காக பழுப்பு நிற முதலீடுகளாக வந்தால் வரவேற்க இயலாது. அது போலவே ஊக முதலீடுகளாக உள்ளே வந்து பங்குச் சந்தையில் சூதாட்டம் நடத்துவதை கண்காணிக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டுமென 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பொருளாதார சுயசார்பின் மீது அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்கள் எல்லாம் வற்புறுத்தி வந்துள்ளார்கள். ஆனாலும் “வண்ணத்துப் பூச்சி” மூலதனமாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தைக்குள் கண்ணா மூச்சி விளையாடுவது நடந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் எவ்வளவு நாள் தங்குவார்கள், எப்போது ஓடுவார்கள் என்றே தெரியாது. இப்படி ஓடுவது டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பை மிகக் கடுமையாக பாதிக்கக் கூடியது. பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும். அமெரிக்க கடன் பத்திரங்களின் வருமான விகிதம் அதிகரிப்பு, உலக அளவிலான நிதி இடர்கள் பற்றிய கணிப்பு, உள் நாட்டு கரன்சிகள் பலவீனம் அடைவது போன்றவை இந்த வெளியேற்றத்திற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இதோடு அமெரிக்காவின் இறக்குமதி வரிச் சுவர்களினால், எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் சேர்ந்து கொண்டு இந்த ஓட்டத்திற்கு காரணமாகி உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தினம் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் நடந்தேறும். வெளியேறுவது அதிகம் எனில் அந்த நாட்கள் நிகர விற்பனை நாட்கள் என அழைக்கப்படும். 2025 இல் இதுவரை 234 வர்த்தக நாட்கள் முடிந்துள்ளன. இவற்றில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் நிகர விற்பனை நாட்கள் 141 ஆகும். 2022இல் நிகர விற்பனை நாட்களாக 146 இருந்ததை 2025 விஞ்சப் போகிறது. 2008 இன் உச்சமான 154ஐ தாண்டாவிடில் 17 ஆண்டு “சாதனையாக” இருக்கும். ப்ளூம்பெர்க் தரவுகளின்படி உலக அளவில் நிகர அந்நிய முதலீடுகள் வெளியேறிச் சென்றதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2025 இல் இதுவரை கனடா 24.9 பில்லியன் டாலர்களோடு முதல் இடத்திலும், இந்தியா 17.8 பில்லியன் டாலர்களோடு இரண்டாவது இடத்திலும் நிகர அந்நிய முதலீடுகள் வெளியேற்றத்தில் உள்ளன. நிகர அந்நிய முதலீடுகள் உள்வரத்து அதிகமாக இருந்த நாடுகளில் அமெரிக்கா 477.2 பில்லியன் டாலர்களோடு முதல் இடத்தில் இருந்திருக்கிறது. இன்னொரு சுவாரசியமான தகவல் சீனா 96.2 பில்லியன் டாலர்கள் அந்நிய நிகர முதலீடு உள்வரத்து கொண்டதாக இரண்டாவது இடத்தில் இருந்துள்ளது. இந்தியாவில் டாலர் ரூபாய் மதிப்பை 90.74 என்று சரித்து அதன் மீது ஏறி வெளியே அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இதன் விளைவை சாமானிய, நடுத்தர மக்கள்தான் சுமக்கப் போகிறார்கள். (தகவல்கள்: இந்து பிசினஸ் லைன் - 14.12.2025)
