சிறு, குறு தொழில்களுக்கு ரூ. 1.5 லட்சம் கோடி கடனாம்; கார்ப்பரேட்டுகளுக்கு ரூ. 1.7 லட்சம் கோடி தள்ளுபடியாம்!
வன் திரையரங்க சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சிறு, குறு தொழில் பாதுகாப்பு, தொழிலாளர்கள் நலனில் கம்யூனிஸ்டுகள் பங்கு என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆற்றிய உரையின் பகுதிகள் வருமாறு: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நாட்டின் முதுகெலும்பு. தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியில், ஏற்றுமதியில் 1 கோடியே 40 லட்சம் பேர் சிறு, குறு தொழில்களில் பணியாற்றுகிறார்கள். இந்திய அளவில் 20 கோடி பேர் பணியாற்றுகிறார்கள். பெரிய தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட படிப்பை படித்தவர்களுக்குத் தான் வேலை வழங்குவார்கள். ஆனால் கிராமப்புற பகுதிகளில் 10, 12ஆம் வகுப்பு, ஐஐடி உள்ளிட்டவைகளை படித்த, படிக்காத லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை கற்று கொடுத்து, வேலை வழங்குவது சிறு, குறு தொழில்கள்தான். ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கொரோனா காலத்தில் 6 கோடியே 30 லட்சம் சிறு, குறு தொழிற் கூடங்கள் இருந்த நிலையில், தற்போது 5.70 லட்சம் சிறு, குறு தொழில் கூடங்களே உள்ளன. ஒன்றிய அரசு கவனம் செலுத்தாதது தான் இதற்கு காரணம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்கள் ரூ. 5 கோடி கடன் பெற முடியும் என்பதை ரூ. 10 கோடியாக மாற்றி அறிவித்துள்ளனர். மேலும், ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி சிறு, குறு தொழில்களுக்கு கடன் கொடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி அதிகபட்சம் 3 ஆயிரம் பேருக்கு என்றால், 5 ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடன் தர முடியும். இது யானைப் பசிக்கு சோளப்பொறி போல. 5 லட்சத்து 70 ஆயிரம் சிறு குறு தொழில்களுக்கு 5 ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் தருவதாக சொல்லி இருக்கும் ஒன்றிய அரசு, சென்ற ஆண்டு விரல் விட்டு எண்ணக்கூடிய தொழில் அதிபர்கள் வாங்கிய கடன் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடியை திரும்ப கட்ட முடியவில்லை என தள்ளுபடி செய்துள்ளது. நிர்மலா சீதாராமனை சந்திக்க மூன்று முறை திருப்பூர், கோவையை சார்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் சென்றனர். மூன்றாம் முறை அவர்கள் சென்றபோது, ஏன் எப்போதும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வருகிறீர்கள் என கேட்டவர்தான் நிர்மலா சீதாராமன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசிடம் 4 அம்ச கோரிக்கை களை முன் வைத்தது. அதில், அரசு ஊழியர்கள் கோரிக்கை, போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகள். அத்துடன் சிறு, குறு தொழில்களுக்கு மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது. வசதி வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தரக்கூடிய சிறு குறு தொழில்களை பாதுகாப்பது அரசின் கடமை. கங்கை கொண்டான் பகுதியில் டாட்டா பவர் பிளாண்ட் அமைக்க உள்ளது. அந்த நிறுவனத்திற்கு இடம், மின்சாரம் உள்ளிட்டவைகள் சலுகையில் கிடைக்கிறது. அதேபோல் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள சிறு குறு தொழில்களுக்கு இடம் இலவசமாக கொடுக்க வேண்டும். இடு பொருட்களை மானிய விலையில் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாலில் விஷம் கலப்பது போல் ஆர்எஸ்எஸ் செயல்பாடு
இந்திய அரசியல் அமைப்பும், நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், ஆர்எஸ்எஸ் இயக்கம் பாலில் விஷம் கலப்பது போல் செயல்படுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கமும் நூற்றாண்டு கண்டுவிட்டது. கம்யூனிஸ்ட் இயக்கமும் நூற்றாண்டை கடந்து விட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கம் பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது, கம்யூனிஸ்டுகள் இன்னும் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்று சிலர் கேட்கின்றனர். பால் குடித்தால் உடனே உடம்பு பலம் பெறாது, ஆனால் பாலிடாயில் விஷம் குடித்தால் உடனடியாக வாயில் நுரைதள்ளும். மரணம் நிச்சயம். அதுபோலத்தான் கம்யூன்ஸ்ட் இயக்கம் பால் போன்றது. அது நாட்டுக்கு நன்மை செய்யும். தாமதமானாலும் நாட்டில் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தும். ஆர்எஸ்எஸ் இயக்கம் பாலிடாயில் விஷம் போன்றது, நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடியது. இந்த நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை சிதைக்கும் வேலையை பாஜக செய்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று மிரட்டுகிறார்கள். இந்தி கற்றால் வட மாநிலத்தில் வேலை செய்யலாம் என்கின்றனர். இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வந்து நன்றாக தமிழ் பேசி பானி பூரி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்கு என்ன பிரச்சனை? யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். உலகம் முழுவதும் வலதுசாரிகள் ஒரே மாதிரிதான் செயல்படுகிறார்கள். இவர்களை முறியடிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தொன்மையான நகரமான மாமதுரை நகரத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க அனைவரும் குடும்பமாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
லவன், குசனாக தொழிலாளி, விவசாயி வர்க்கம்
மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் பேசுகையில், ராமாயணத்தில் அசுவமேத யாகம் நடத்த ராமர் குதிரையை பல நிலப்பரப்பில் விட்டபோது யாருமே அதைத் தடுத்து நிறுத்தவில்லை. கடைசியில் லவன், குசன் என்ற இரு சிறுவர்கள் தான் ராமனின் அசுவமேத குதிரையைத் தடுத்து நிறுத்துவார்கள். அது போல பாஜக மோடி அரசின் ஜனநாயக விரோத மக்கள் விரோத கொள்கைகளை, லவன், குசன் போல தொழிலாளி வர்க்கமும், விவசாயி வர்க்கமும் கூட்டாக சேர்ந்து முறியடிக்கும் என்று கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுவார். அதற்கேற்ப தொழிலாளி, விவசாயி வர்க்கங்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வழி வகுக்கும் என்று கூறினார்.