சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பாபநாசம், ஜன.24- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப், ஜேக் அண்ட் ஜில் மெட்ரிக் பள்ளி இன்ட்ராக்ட் சங்கம், புனித பாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை, பாபநாசம் டி.எஸ்.பி முருகவேலு தொடங்கி வைத்தார். பாபநாசம் மெயின் சாலை வழியாக சென்ற பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், சாலை பாதுகாப்பு தொடர்பான முழக்கங்களை எழுப்பியதுடன், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பாபநாசம் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, லியோனல், மைக்கேல், ரோட்டரி உதவி ஆளுநர் பக்ருதீன் அலி அகமது, முன்னாள் தலைவர்கள், பப்ளிக் இமேஜ் இயக்குநர் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பாபநாசம் பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதையொட்டி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான 200 மாணவிகள் பங்கேற்று, சாலையில் பேரணியாகச் சென்று, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன் பிறகு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி, உடற்கல்வி ஆசிரியர் ரதிஸ்ரீ, பட்டதாரி ஆசிரியர்கள் கண்ணகி, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
