ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட தடகள அணியை இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்புத்தொடர் ஓட்ட பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜு, நாகநாதன் பாண்டி, ரேவதி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ரேவதி மதுரையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். 23 வயதான இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். பாட்டி ஆரம்மாளின் முழு அரவணைப்பில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மாநில மற்றும் தேசிய தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை ரேவதி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 4ம் தேதி நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து ரேவதி சாதித்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்குத் தேர்வாகியுள்ளார்.
ஆசியத் தடகள சான்பியன்ஷிப் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ள ரேவதி, தற்போது மதுரையில் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.