tamilnadu

img

மாநில அந்தஸ்துக்காக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார்! முதல்வர் ரங்கசாமி பேச்சு

மாநில அந்தஸ்துக்காக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார்!  முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி, பிப்.12-  புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காகச் சட்ட மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், 2026-27 நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் நோக்கில் சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்-12) நடைபெற்றது. நிதிப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்க சாமி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்காக ரூ. 5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பேரவைத் தலைவர் செல்வம் குரல் வாக்கெடுப்பு மூலம் இதற்கு ஒப்புதல் பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணித்துறை ஊழி யர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராடி வரு கின்றனர். இரட்டை என்ஜின் அரசு என்று கூறிவிட்டுத் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. மாநில அந்தஸ்துக்காகத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, "தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இதற்குத் தயார்; நீங்கள் (திமுக) தயாராக இருக்கிறீர்களா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்புவோம்," என்று கூறினார். விவாதத்தின் இறுதியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலைப் புறக்கணிக்கத் தாங்களும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து இது குறித்துப் பேசி முடிவெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் செல்வம் கூட்டத்தைக் காலவரையின்றி ஒத்திவைத்தார்.