சென்னை, டிச. 28 - புதுச்சேரி பட்டானூரில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு சனிக்கிழமையன்று (டிச.28) நடை பெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை, அக்கட்சி யின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நியமனம் செய்தார். அப்போது, மேடையில் ராமதாஸூக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருந்த அவரது மகனும் பாமக தலைவருமான மருத்துவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களே ஆனவருக்கு இளைஞரணி பதவி கொடுப்பதா, என்று அன்புமணி கட்டமாக கேள்வி எழுப்ப, பதிலுக்கு, நான் தான் கட்சி யை நிறுவினேன், நான்தான் முடி வெடுப்பேன் என ராமதாஸ் கூறினார். இது நான் ஆரம்பித்த கட்சி யாராக இருந்தாலும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். என் பேச்சைக் கேட்காதவர்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று ராமதாஸ் மேடையிலேயே அறிவித்தார். இதனால் கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. தொண்டர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் கலவரம் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து, ஜி.கே மணி கூட்டம் நிறைவு செய்யப்படுகிறது என்றார். மைக் மீது அன்புமணி கோபம் அப்போது அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி, பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கு. அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று கூறி அலுவலக எண்ணை அறிவித்தார். மைக்கையும் ஓங்கி அடித்தார். இதனிடையே, ராமதாஸ் தனது காரில் ஏறி வெளியேற முயன்றபோது, அவரது காரை மறித்த பாஜக தொண்டர்கள், அன்புமணி வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸ் அறிவித்த முகுந்தன் யார்? பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் என்று கூறப்படுகிறது. அதாவது அன்புமணியின் மூத்த சகோதரி மகன். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். அவர் பதவி விலகிய நிலை யில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் அன்புமணி - ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. குழப்பத்தில் தொண்டர்கள் பாமக பொதுக்குழு கூட்டத்தின் மேடையிலேயே தந்தையும் மகனும் (ராமதாஸ்-அன்புமணி) வார்த்தைப் போர் நடத்தினர். மேலும், பாமகவை குடும்பக் கட்சியாக மாற்ற முயற்சிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பிய அன்புமணி, தனது மனைவி சௌமியாவுடன் மேடையில் இருந்து வெளியேறியதும் அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ராமதாஸ் - அன்புமணி மோதல் மூலம் பாமகவில் நடப்பது உண்மை யிலேயே அதிகாரப்போட்டி தானா, அல்லது 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணியில் இருந்தால் தேற முடியாது; எனவே, தாங்களே பாமகவிற்குள் ஒரு பிளவை இருப்பது போல காட்டி, அதில் ஒரு அணி அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி நடக்கிறதா என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருமுறை தப்பு செய்தால் மீண்டும் தப்பு செய்வோம் என்று அர்த்தம் இல்லை. அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வோம். அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம் என்றும் ராமதாஸ் பேசியிருப்பதால், ராமதாஸ் - அன்புமணி மோதல் ஊரை ஏமாற்றும் நாடகமாக இருக்க லாம் என்று சந்தேகங்கள் எழுந் துள்ளன.