கேரள வங்கி பற்றி அறிய பஞ்சாப் குழு
பஞ்சாப் மாநில கூட்டுறவு வங்கியின் குழு ஒன்று கேரள வங்கியைப் பார்வையிட்டது. பஞ்சாப் மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் ஜக்தேவ் சிங் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு வங்கியைப் பார்வையிட்டது. கேரள வங்கியின் ஐந்து ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து விவாதித்த பஞ்சாப் குழு, 50,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள கடனை வைத்திருக்கும் நாட்டின் முதல் மாநில வங்கியாக மாறியதற்காக கேரள வங்கியை பாராட்டியது. கேரள வங்கித் தலைவர் கோபி கோட்டமுரிக்கல், தலைமை நிர்வாக அதிகாரி ஜோர்டி எம் சாக்கோ, தலைமைப் பொது மேலாளர் ராய் ஆபிரகாம், பொது மேலாளர் டாக்டர் ஆர். சிவக்குமார் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்தக் குழு பலராமபுரம் சேவை கூட்டுறவு வங்கி மற்றும் நந்தியோடு சேவை கூட்டுறவு வங்கியையும் பார்வையிட்டது. கேரள வங்கி குறித்து… 13 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் கேரள மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டு கேரள வங்கி என்னும் புதிய நிறுவனத்தை பினராயி விஜயன் அரசு உருவாக்கியது, மலப்புறம் மாவட்ட கூட்டுறவு வங்கி கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது. ஏழு மண்டல அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு கார்ப்பரேட் அலுவலகமும் உள்ளது. மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களில் கடன் செயலாக்க மையங்களைக் கொண்டுள்ளது. தற்போது, கேரள வங்கி மாநிலம் முழுவதும் 823 கிளைகளைக் கொண்டுள்ளது. கேரள மக்களின் நிதி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கேரள வங்கி எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.