2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில், 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐசிசியில் முழுநேர உறுப்பினராக 12 அணிகள் இருக்கும் நிலையில் இதில் வெறுமனே 6 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் பிரிவில் 6 அணிகள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டி20 வடிவில் நடைபெறும் இதில், ஒவ்வொரு அணியிலும் 15 பேர் தேர்வுசெய்யப்பட்டு மொத்தமாக 90 பேர்கள் ஒலிம்பிக்ஸுக்கு தேர்வாக இருக்கிறார்கள். ஒலிம்பிக்ஸை நடத்தும் அமெரிக்க அணி தானாகவே தேர்வானதால் மீதமுள்ள 5 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இந்த அணிகள் தேர்வு முறைகள் குறித்து தற்போது எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் நடைபெற்றது.