கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சுவாமி சித்பவானந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி நிர்வாகம் அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை நெகமம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து, பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.