தரமான சாலை வசதி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அய்யம்பேட்டை அருகே, கணபதி அக்ரஹாரத்திலிருந்து காவிரி கரையை ஒட்டிச் செல்லும் சாலை வழியாக கிருஷ்ணாபுரம், உள்ளிக் கடை, இளங்கார் குடி, நாயக்கர் பேட்டை வழியாக கபிஸ்தலத்தை சென்றடையலாம். இந்தச் சாலை வழியே பைக், வேன் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை அருகிலுள்ள படுகைப் பகுதியில் வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. விளைந்த வாழை இலை, வாழைத் தார் உள்ளிட்டவற்றை சந்தைப்படுத்த விவசாயிகள் இந்தச் சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர். இந்தச் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பழுதடைந்த நிலையில் இருப்பதுடன், சாலையோரங்கள் அரிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தச் சாலையில் சென்று வரும் கிராம மக்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சாலையில் அடிக்கடி சென்று வந்தால் நல்ல நிலையிலுள்ள வாகனங்கள் கூட பழுதாகி விடும் என்கின்றனர். இந்தச் சாலையைப் பயன்படுத்தும் விவசாயிகள், கிராம மக்களின் நலன் கருதி, இந்தச் சாலையை அகலப்படுத்தி, தரமானதாகப் போடுவதுடன், காவிரி கரையையொட்டி பல பகுதிகளில் கரைத் தடுப்புச் சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனையும் விரைவாக கட்டுவதற்கு கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு, தொகுதி -IV சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்களின் மூலம் பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. மேற்காணும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு மாதங்களுக்கு தினசரி காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வு ஏப்.6 அன்று நடைபெறவுள்ளதால், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் கீழ்க்காணும் தஞ்சாவூர் மாவட்ட இணையத்தளத்தில் https://thanjavur.nic.in விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஆட்சியரை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்
கோரிக்கை மனுவை கசக்கி வீசி, உதாசீனப்படுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் குளித்தலை வட்டக்கிளை சார்பில், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் துணைத் தலைவர் திருஞானம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம் கண்டன உரையாற்றினர். வட்டச் செயலாளர் பி. பரிமளம் நன்றி கூறினார். வட்டக்கிளை நிர்வாகிகள் கீதாஞ்சலி, வினோத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசை கண்டித்து ஓய்வூதியர்கள் கரூரில் ஆர்ப்பாட்டம்
கரூர், ஏப்.4- ஓய்வூதர்களுக்கு ஒன்றிய அரசு எட்டாவது ஊதியக்குழுவில் வழங்க வேண்டிய பணப்பலன் களை குறைப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதை கண்டித்தும், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப் பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய, மாநில அரசு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கரூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். விஸ்வநாதன் தலைமை வகித்தார். அரசு அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் எம். சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் எம்.எஸ். அன்பழகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்
அரசு பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு, மரபு வழி மருத்துவம், யோகா பற்றிய விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு, மரபுவழி மருத்துவம் மற்றும் யோகா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் நா. மலர்க்கொடி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மருந்து மாத்திரை இல்லாத நோயற்ற வாழ்வு குறித்தும், மாணவர்களின் உணவு பழக்கம் பற்றியும், யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், முதுநிலை கணினி ஆசிரியரும், அக்கு பிரஷர் தெரபிஸ்ட்டுமான செ. சுதா தெளிவாக எடுத்துரைத்து விளக்கமளித்தார். நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.