ஏப்.18-இல் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஏப்.11- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் வியாழனன்று நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 18-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன கூட்டங்கள் நடத்தப்படும். இதற்கு முன்பாக வருகிற 14-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடையோ அல்லது ஒத்திவைப்பது தொடர்பான உத்தரவு வந்தால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படும். தமிழக கவர்னரின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும். அல்லது ஒன்றிய அரசு அவரை பதிவி லிருந்து நீக்க வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்ப கோணம் அருகில் உள்ள சுவாமி மலையில் வருகிற டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மஹல்லா (பள்ளி வாசல்)ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாட்டினை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூ பக்கர், நவாஸ் கனி எம்பி உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாங்கனாம்பட்டி, முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 71 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாம்பட்டி மற்றும் முள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 71 பேர் காயம் அடைந்தனர். திருவரங்குளம் அருகே, மாங்கனாம்பட்டியில் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 572 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 250 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 31 பேர் காயம் அடைந்தனர். அதில், 6 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணிகளை கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் செய்தனர். இதேபோல், பொன்னமராவதி அருகே முள்ளிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை, கோட்டாட்சியர் அக்பர் அலி தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 829 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பரிசு பொருட்களை வழங்கினார். காளைகளை அடக்குவதற்கு 225 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 40 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு பணிகளை காரையூர் காவல்துறையினர் மேற்கொண்டனர்.