வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில், வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.சலாம் தலைமை வகித்தார். மஜக மாவட்டச் செயலாளர் அதிரை சேக் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் கோட்டை ஹாரீஸ் கண்டன முழக்கமிட்டார். மாநிலச் செயலாளர் நெய்வேலி இப்றாகிம், சமூக செயற்பாட்டாளர் சத்திய பிரபு செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
வெப்ப அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை கூட்டம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், வெப்ப அலை எச்சரிக்கைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது: வெப்பம் அதிகம் உள்ள காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதின் அவசியம் குறித்தும், வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எனவே, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும், வெப்பம் அதிகம் உள்ள காலகட்டங்களில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் பா.ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.