“விடுதலை-2” திரைப்படம் வெளி யான நாளிலிருந்து தமிழ கத்தில் விவாதப்பொருளாக மாறி யிருப்பது வரவேற்கத்தக்கது. இப்படத்தில் வரும் பாத்திரங்கள் பற்றியும், காட்சிகள் பற்றியும் பலவித மான விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. தேசிய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு 100 ஆண்டு களைக் கடந்து விட்டது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை உருவான 1934 இல் இருந்து இன்றுவரை கம்யூனிஸ்டுகள் அளப்பரிய தியாகம் செய்திருக் கின்றனர். இவ்வியக்கம் பற்றி பல நூல்கள் வெளியாகியிருந்தாலும் கூட, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முழுமையான வரலாற்றை பதிவு செய்துவிட்டதாக சொல்லிவிட முடி யாது. தமிழகத்தில் பல மாவட்டங் களில் நகரங்களிலும் ஆயிரக்கணக் கான கிராமங்களிலும், அந்நியர் ஆட்சியின்போதும் சுதந்திர இந்தியா விலும் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்கா. கொல்லப்பட்டவர்கள் ஏராளம். சிறை யில் அடைக்கப்பட்டவர்கள் பல லட்சம். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தில் குறிப்பாக கீழத்தஞ்சை பகுதியின் தஞ்சை, திருவாரூர், நாகை, மயி லாடுதுறை மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமமும் போராட்டக்களமாக திகழ்ந்தது. இத்தகைய தியாக வரலாற்றின் ஒரு சில பக்கங்களைத் தான் இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படமாக்கியிருக்கிறார்.
விடுதலை-2 முற்றிலும் புனைவு என்று இயக்குநர் பதிவு செய்தி ருக்கிறார். இப்பதிவு தற்காப்பிற்காக. இருப்பினும் சில கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்களை பாத்திரங் களாக்கியிருக்கிறார்; போராட்ட நிகழ்வுகளை காட்சிகளாக்கியிருக் கிறார். கதாபாத்திரங்களாக்கப்பட்ட தலைவர்களின் வாழ்க்கை காட்சி களாக்கப்பட்ட களப்போராட்டங்கள் நூற்றுக்கு நூறு அசலானதல்ல. நிஜமும் புனைவும் இணைந்த கலவை யாகத்தான் இயக்குநர் திரைப்பட மாக்கியிருக்கிறார். கதையை திரைமொழியில் சொல்கிறபோது புனைவு தவிர்க்க முடியாதது. திரைக்கதையின் ஒன் – லைன் என்னவெனில் ‘வர்க்க விரோதி களுக்கெதிரான அழித்தொழிப்பு அரசியலை கைவிட்டு மக்கள் இயக்கப்பாதைக்கு திரும்புவது’ என்பதே. இதில் வர்க்கப்போராட்டம் நூலிழையாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் மேற்கொண்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை உத்தியையும் பாத்திரங்கள் மூலமாக பேச வைக்கும் திரைக்கதையை கட்ட மைத்தது பாராட்டுக்குரியது. கீழத் தஞ்சையில் பண்ணை அடி மைமுறை கோலோச்சிய காலத்தில் பட்டியலின மக்கள் பட்டபாடும் அவர்கள்மீது பண்ணையார்கள் நிகழ்த்திய கொடுமையும் வரலாற் றில் இருண்ட பக்கங்கள். பட்டியலின மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது; சூரிய உதயத்திற்குமுன் வேலை க்குச் செல்வதும் சூரிய அஸ்தமனத் திற்கு பிறகு வீடு திரும்புவதும் அம் மக்களின் அன்றாட வாழ்க்கை. பட்டி யலின மணப்பெண் மணம் முடித்த வுடன் நிலப்பிரபுவின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற பாலியல் வன்கொடுமை, பண்ணையடிமை முறை, புரையோடிப்போன தீண்டா மைக் கொடுமைகளை காட்சி களாக்கியதோடு இவைகளுக்கு எதிரான “அடித்தால் திருப்பி அடி” என்ற முழக்கம் உள்ளிட்ட பட்டியலின மக்களின்; எழுச்சியையும் காட்சிப் படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில் தீண்டாமைக் கொடுமை என்ற சமூக பிரச்சனை மட்டுமல்ல. கூலி உயர்வுக்கான போராட்டமும் நிலப்பிரபுக்களால் குத்தகை விவசாயிகள் வஞ்சிக்கப் படுவதும் குத்தகை விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்து தங்களுக்கு சேரவேண்டிய குத்தகையை தாங்களே முத்திரை மரக்காலால் அளந்து எடுத்துக் கொள்ளும் சாதனையை போராட்டத் தின் மூலமாக வென்றெடுப்பது நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதி ராக வர்க்கப்போராட்டம் நடந்துள்ள தும் திரைக்கதையின் ஒரு அம்சமா கும். தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும், நிலப்பிரபுத்துவச் சுரண்டலை எதிர்த்தும் நடை பெற்றதுதான் கீழத்தஞ்சையின் வர்க்கப்போராட்ட வரலாற்றில் முக்கிய அம்சம். இப்போராட்டத்தில் பட்டியலின மக்களும், இதர சமூக மக்களும் இணைந்து போராடிய தால்தான் ஒப்பீட்டளவில் வெற்றி கிடைத்தது. இந்த நுட்பமான அம்சத்தை படம் பார்ப்பவர்கள் வெளிப்படையாக புரிந்துகொள் ளும் அளவிற்கு காட்சிப்படுத்தி யிருக்கலாம். கீழத்தஞ்சையில் நிகழ்ந்த வர்க்கப்போராட்டத்தை காட்சிப்படுத்திய இயக்குநர் கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் ஒரு பகுதியி னர் தீவிரவாத பாதையை தேர்ந்தெ டுத்ததை காட்சிப்படுத்த பெண்ணா டம் (கடலூர் மாவட்டம்) மற்றும் அரியலூர் மாவட்டத்தின் சில பகுதி களை திரைக்களமாக ஆக்கி யிருக்கிறார். அங்குதான் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) கே.கே(கிஷோர்)வின் வழிகாட்டுத லில் தொழிலாளர்களின் தோழ னாக மாறுகிறார். கே.கே.வுடன் முரண்பட்டு வாத்தியார் தீவிரவாதி யாக உருவெடுக்கிறார். பெண்ணாடம் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து தீவிரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட்ட கலியபெருமாள் பாத்தி ரத்தில் பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி வருகிறார்.
காவல்துறையின் மூலம் அரங் கேற்றப்படும் அரசு பயங்கர வாதம் சரியாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. காவல்துறையின் நட வடிக்கைகள் அவர்கள் நடத்தும் துப்பாக்கிச் சூடுகள் இதனால் கொல்லப்படும் தீவிரவாதிகள் போன்ற செய்திகளை ஊடகங்கள் பிர சுரிக்கக் கூடாது என்பதிலும் காவல் துறையின் அத்துமீறலை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப் படும் சித்து விளையாட்டுக்களையும் திரைமறைவில் தலைமைச் செய லாளர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கம் மாநில முதல்வ ரின் ஆலோசனையோடு எப்படி கட்ட மைக்கிறது என்பது அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திரைக்கதையின் கருவான பெரு மாள் வாத்தியார் அழித்தொழிக்கும் பாதையிலிருந்து மக்கள் இயக்கப் பாதைக்கு திரும்புவதை உரை யாடல் மூலமாகவும், காட்சிகள் மூல மாகவும் ஏற்கத்தக்க முறையில் இயக்குநர் திறம்பட கையாண்டிருக் கிறார். பாதை மாறிய பிறகான உச்சபட்ச காட்சி ஆளும் வர்க்க அணுகுமுறையை அம்பலப்படுத்து கிறது. “நாம் மக்களுக்காக ஆயுதம் தூக்கிப் போராடுவதை விட மக்களை அரசியல்படுத்திட்டா மக்களே தங்க ளுக்கான ஆயுதம் எதுன்னு முடிவு பண்ணிடுவாங்க” எனும் வசனமும் அதை உணர்த்துகிறது.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்த பி. சீனி வாசராவ், மணலூர் மணியம்மை போன்ற தலைவர்களை இயக்கு நர் கதா பாத்திரங்களாக்கி யிருக்கிறார்.தியாகிகளைப் பற்றியும் கதா பாத்திரங்கள் மூலம் பேச வைத்திருக்கிறார். தீவிர அரசியல் உள்ளடக்கம் கொண்ட ஒரு திரைப்படத்தை வெகு ஜன சினிமாவாக அளித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறனின் பணி சிறப்பு. நாயகன் பாத்திரத்தை ஏற்றி ருக்கும், விஜய் சேதுபதி, துணைவராக வரும் மஞ்சுவாரியர், காவலர்களாக நடித்திருக்கும் சூரி, சேத்தன், தமிழ், இதர முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், இளவரசு உள்ளிட்ட அனை வரின் பங்களிப்பும் பாராட்டுக்குரி யது. கதை மற்றும் காட்சிகளுக் கேற்ற பின்னணி இசையையும், பாடல்களையும் தந்த இளையராஜா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலை ஞர்களின் திறமையும் பாராட்டுக்குரி யது. விடுதலை முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியாரை பிடிக்கும் காவலர் குமரேசன் (சூரி) விடுதலை 2 இல் இறுதிக் காட்சியில் எடுக்கும் முடிவு யாரும் எதிர்பாராததாகவும், திரைப்படம் பேசும் அரசியலை முன்வைப்பதாகவும் உள்ளது.