ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பணம் பறித்த காவல்துறை ஆய்வாளர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன். இவர், தனக்குச் சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ஆம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், மேற்படி நிலத்தினை நீர்வளத்துறை, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக கையகப்படுத்தி, அதற்கு இழப்பீடாக ரூ.54,00,000/- வழங்கியுள்ளது. பின்னர் ரவிச்சந்திரன், நீர்வளத்துறையால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக வெட்டியுள்ளார். இதனை அறிந்த தருமபுரி மாவட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் நெப்போலியன் என்பவர், கடந்த 08.03.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆடிட்டர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு, நீர்வளத்துறையால் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடு கொடுத்த இடத்தில் இருந்து சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டியது தொடர்பாக பந்தநல்லூர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் தனக்கு வழங்குமாறும் மிரட்டியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமலே, தான் ஆட்சியரின் உறவினர் என்றும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கச் செய்திட தன்னால் முடியும் என நம்ப வைத்துள்ளார். இந்நிலையில், ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் நெப்போலியனுக்கு முறையே ரூ.25 லட்சம், ரூ.55 லட்சம், ரூ.20 லட்சம் என தருமபுரி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்குச் சென்று 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மீண்டும் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு, மேலும் 1 கோடி ரூபாய் வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மிரட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன், இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். புகார் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் Cr.No.06/2025 u/s 316(4), 319(2), 318(4), 351(2) BNS – இன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், 03.04.2025 அன்று தருமபுரி தொப்பூர் சுங்கச்சாவடி நிலையம் அருகில், புகார்தாரர் ரவிச்சந்திரனிடமிருந்து, காவல் ஆய்வாளர் நெப்போலியன் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்ட போது, தனிப்படையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் நெப்போலியன், கும்பகோணம் முதலாவது நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஏப்.15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சோதனைகளில் ஏமாற்றப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.